நண்பர்கள் வட்டங்களை உருவாக்கி, கருத்துக்களையும், ஆடல், பாடல் பைல்களையும், படங்களையும் பகிர்ந்து கொள்ள இன்று பல சோஷியல் நெட்வொர்க் தளங்கள் இணையத்தில் இயங்குகின்றன. இந்த தளங்கள் மூலம் அரசியல் முதல் ஆன்மிகம் வரையிலான பல கருத்து யுத்தங்கள் நடந்து வருகின்றன. அதே போல நண்பர்கள் வட்டங்களில் ஒருவருக்கொருவர் உதவிகளைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வுகள் தொடர்கின்றன. வாழ்க்கையில் இணைந்து கொள்ளும் சுபமான திருமணங்களும் இவை மூலம் நடந்தேறுகின்றன.
இந்த சோஷியல் தளங்களில் எவை மக்களிடையே பிரசித்தி பெற்றவை என்ற ஆய்வு மேற்கொள்ள இயலவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு தளமும் ஒரு வகையில் புகழும் பயனும் உள்ளவையாய் உள்ளன. ஆனால் இன்றைய அளவில் பதிந்துள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில், கீழே கண்டுள்ளபடி இந்த தளங்கள் இடம் பிடித்துள்ளதாக, அண்மையில் மேற்கொண்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு விக்கிபீடியாவினால் மேற்கொள்ளப்பட்டது.
1. Facebook: ஏறத்தாழ 40 கோடிக்கு மேலான எண்ணிக்கையில் இதன் பதிந்துள்ள வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
2. Qzone: இரண்டாவது இடம் பிடித்துள்ள இந்த தளம் குறித்து நீங்கள் அறிந்து கொள்ளவில்லையே என்று கவலைப் பட வேண்டாம். இது சீன மொழி தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய தளம். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 கோடிக்கும் மேல்.
3. Habbo: இந்த தளத்தை இந்த செய்தி எழுதும்போதுதான் கவனித்தேன். தளம் சென்று பார்த்த பின்னரே, இது முற்றிலும் இந்தக் கால இளைஞர்களுக்கு என்று தெரிந்தது. இதில் 31 கம்யூனிட்டி பிரிவுகள் உள்ளன. ஏற்கனவே 16 கோடியே 20 லட்சம் பேர் உறுப்பினர்களாகப் பதிந்து உள்ளனர்.
4. My Space: பேஸ்புக் பிரபலமடையும் முன்னர் மை ஸ்பேஸ் தளம் தான் பலரின் விருப்ப சோஷியல் தளமாக இருந்தது. இன்னும் இதற்கென பல ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இசையை ரசிக்கும், அது குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்களுக்கு இது மிகவும் பிடித்த தளம். 13 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் இதில் பதிந்துள்ளனர்.
5. Window Livespaces: இது ஒரு பிளாக் கொண்ட சோஷியல் நெட்வொர்க் தளமாகும். 12 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கொண்ட இந்த தளத்திற்கு, உலகெங்கிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதனை இந்த சோஷியல் நெட்வொர்க் பட்டியலில் சேர்த்து கணக்கிடுகையில், வேர்ட் பிரஸ் போன்ற பிளாக்கர்களின் தளத்தை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள தவறுகின்றனர் என்று தெரியவில்லை.
6. Orkut: பிரேசில் மற்றும் இந்தியாவில் மிக அதிகமாகப் பேசப்படும் மற்றும் பயன்படுத்தும் தளம். மற்ற நாடுகளில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளிலிருந்து அவ்வளவாக தீவிர உறுப்பினர்கள் இதில் இல்லை. இதனை எழுதுகையில் இத்தளத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டி இருந்தது.
7. Friendster: ஒரு காலத்தில் சோஷியல் நெட்வொர்க்கிங் தளம் என்றால், இதுதான் என்றிருந்தது. இதில் உள்ள 9 கோடிக்கும் மேலான பதிந்த வாடிக்கை யாளர்கள், இன்னும் இதில் செயல்படுகின்றனரா என்பது கேள்விக் குறியே.மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் பலர், பேஸ்புக் மற்றும் மை ஸ்பேஸ் தளங்களுக்குத் தாவி விட்டதால் இந்த சந்தேகம் எழுகிறது. ஆனால் தென் கிழக்கு ஆசிய நாடுகளில், இத்தளத்தின் வாடிக்கையாளர்கள் இன்னும் இதன் ரசிகர்களாக உள்ளனர்.
8. hi5: இதன் 8 கோடி உறுப்பினர்கள், பெரும்பாலும் இந்தியா, மத்திய ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ளனர். தாய்லாந்து, ரொமானியா மற்றும் போர்ச்சுகள் நாடுகளில் இது மிகவும் புகழ் பெற்ற சோஷியல் நெட்வொர்க்கிங் தளமாகும். அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் இது அவ்வளவாகப் பரவவில்லை.
9. Twitter: இந்த சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள் குறித்த தகவல்கள், ஆய்வு குறித்து படிக்க அமர்கையில், இதில் முதல் இடம் பெற்ற தளமாக ட்விட்டர் தான் இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் முடிவுகள் வேறுவிதமாக இருந்தன. நிச்சயம் இன்னும் சில ஆண்டுகளில், இந்த தளம் முதல் இடத்தைப் பெறலாம். இத்தள உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 8 லட்சம் இருக்கிறார்கள்.
10. VkonTakte: இந்த தளத்தையும் நாம் அறிந்திருக்க முடியாது. ஏனென்றால் இது ரஷ்ய மொழி தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 கோடியே 22 லட்சம். இது தொடர்ந்து உயர்ந்து கொண்டுள்ளது. சோஷியல் நெட்வொர்க் தளங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், யு–ட்யூப் தளம் ஏன் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று தெரியவில்லை. சேர்த்துக் கொள்ளப் பட்டிருந்தால், அந்த தளம் நிச்சயமாய் இந்த பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கும்.
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment