Sunday, August 7, 2011

ஆ. ராசா, கனிமொழி வரிசையில் தயாநிதி மாறன்!


 
 
2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி ஆ. ராசாவும், கனிமொழியும் சிறை யிலுள்ளனர். சூன் மாத இறுதியில் வெளிவரவுள்ள குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை இழந்து கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏன், 'சூலை 7 இல் மாறன் கைது' என்று பத்திரிகைகள் செய்தி வெளியிடவும் தொடங்கியுள்ளன. 'நம் வாழ்வு' வாசகர்களுக்கு இந்த ஊழல் தொடர் கைது பற்றிய சிறிய தெளிவை அளிப்பது நல்லது.

முரசொலி மாறனின் வாரிசாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியால் முதல் முறையாக எம்.பி.யாக்கப்பட்டு எடுத்த எடுப்பிலேயே கேபினட் அமைச்சருமாகி, தி.மு.க. விலும், காங்கிரசிலும் மிகுந்த செல்வாக்கு பெற்றார் தயாநிதி மாறன். மாறன் தன் சகோதரர் கலாநிதியுடன் இணைந்து அரசியலில் - தி.மு.க.வில் வலுவாகக்காலூன்றி 'சன்' குழும சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப பல திட்டங்களைத் தீட்டினர். இத்திட்டத்தின் முதல் செயல்பாடாக 'தினகரன்' நாளிதழ் வாங்கப்பட்டு ஒரு பிரதி ரூ. 1க்கு விற்று எழுத்து வழி ஊடகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். 'மத்தியில் சிறந்த அமைச்சர் யார்?' என்ற சர்வே தினகரனில் வெளிவந்தது. அதன்பின் 'கருணாநிதியின் அரசியல் வாரிசு யார்?' என்ற சர்வேயும் வெளிவந்தது. இவைகளில் மத்தியில் சிறந்த அமைச்சர் தயாநிதி மாறன் என்றும், மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து அடுத்தபடியாக தி.மு.க.வில் செல்வாக்குள்ள வாரிசாகவும் மறைமுகமாகக் காட்டப்பட்டார் தயாநிதி. இப்படி மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தி கலைஞருக்குப் பின் அழகிரியையும், கனிமொழியையும் அப்புறப்படுத்த மாறன் சகோதரர்கள் முயன்ற கதை நாம் அறிந்ததே.

தயாநிதி மாறன் தன் தந்தையின் மறைவுக்குப் பின் 2006 இல் அரசியலுக்குள் நுழைந்த காலத்திலிருந்தே தன்னையும், தன் சகோதரரின் வர்த்தக நலன்களையும் வளர்த்தெடுக்கவே முயற்சித்து வந்துள்ளார் என்று அவரது கட்சியினரே பேசுவதாக 'இந்தியா டுடே'யில் செய்தி வெளியானது.

முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் ஊழல் கைவரிசை பற்றிய செய்திகள் வெளிவராத நாளும் இல்லை, வெளியிடா பத்திரிகையும் இல்லை. ஏர்செல்லின் உரிமையாளர் (முன்னாள்) சிவ சங்கரன், நீதிபதி சிவராஜ் பாட்டீல் ஒரு நபர் கமிட்டியின் முன்பு தயாநிதிக்கெதிரான வாக்குமூலம் அளித்துள்ளார். 

அவ்வாக்குமூலத்தின்படி 2005 இல் ஏர்செல் டிஷ்நெட் நிறுவனத்துக்கு உரிமம் வழங்குவதில் தொலைத் தொடர்புத் துறை தேவையில்லாக் காலதாமதம் செய்ததால் ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் வீணாகி யது. இதனால் சிவசங்கரன் ஏர்செல் பங்குகளை மாக் ஸிஸீக்கு விற்றார். இந்தச் சூழ்நிலையில் மாக்ஸிஸ் வச மிருந்த ஏர்செல்லுக்கு 2001 ஆம் ஆண்டின் விலைப்படி மாறன் உரிமத்தை விற்றார். இதனால் அரசுக்குப் பெருத்த இழப்பு ஏற்பட்டது. அதாவது 'முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற விதியை மீறி கொல்கொத்தாவில் ஏர்செல்லுக்கு 4.4. மெ.ஹெர்ட்ஸ் + 4.4. மெ.ஹெர்ட்ஸ் தொடக்க நிலை அலைவரிசை ஒதுக்கப்பட்டது. தயாநிதி மாறனின் தலையீடு இன்றி இம்முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறது அறிக்கை.
இவ்வாறு முறைகேடாக உரிமங்களையும், அலைவரிசையையும் பெற்றதற்கு நன்றிக்கடனாக மாறன் குடும்பத்தவரின் 'சன்' டைரக்ட் பிரைவேட் லிமிடெட்டில் மாக்ஸீஸ் குழுமம் ரூ. 625 கோடி முதலீடு செய்தது. மேலும் மாறன் குடும்பத்துக்குச் சொந்தமான சவுத் ஏஷியா எஃப்.எம். லிமிடெட் நிறுவனத்திலும் மாக்ஸிஸ் ரூ. 100 கோடி முதலீடு செய்தார்.

ஐ.மு.கூ. அரசின் 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற கொள்கையை மாறன் மீறியுள்ளது வெளிப் படையான உண்மை. காரணம், 2004 டிசம்பர் 14 இல் ஆறு சர்க்கிள்களுக்கு உரிமம் கோரி வோடஃபோன் விண்ணப்பித்தது. அதற்கு மாறாக 2006 ஜனவரியில் நான்கு சர்க்கிள்களுக்கும், மார்ச் 3 இல் மூன்று சர்க்கிள்களுக்கும் மாக்ஸீஸ் விண்ணப்பித்து, அதே ஆண்டு டிசம்பர் 5 இல் உரிமத்தையும் பெற்றது. வோடஃபோன் மூன்று ஆண்டுகள் காத்திருக்க, ஏர்செல் மாக்ஸிஸ் உடனே பெற்றது எப்படி? ஏர்செல் என்பது ஓர் உண்மை நிறுவனமா இல்லை முகமூடி (சன் குழுமம்) நிறுவனமா என்று சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சிவசங்கரனின் வாக்கு மூலம் 'சூரியக் குடும்பத்தின்' அசூர வளர்ச்சியைத் தடுத்து அவர்களை தகிப்பிற்குள்ளாக்கியுள்ளது. மாறன் - மாக்ஸிஸ் - ஏர்செல் கூட்டணி குறித்த புலனாய்வு மேற்கொள்ளும் துழாய்வில் ராசா, கனிமொழி வரிசையில் தயாநிதி என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

மற்றொரு ஊழல், 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை தன் மூலமாக சன் டிவி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள செய்து அரசுக்கு ரூ. 440 கோடி இழப்பு ஏற்படச் செய்தார் மாறன் என்று சி.பி.ஐ அறிக்கை கூறுகிறது. இந்த 323 தொலைபேசி இணைப்புகளும் பி.எஸ்.என்.எல். போட்கிளப் பகுதியிலுள்ள தயாநிதி மாறனின் இல்லத்தில் நிறுவப்பட்டு திருட்டுத்தனமாக 3.4 கி.மீ. தொலைவுக்கு தரையடி வழியாக சன் டிவி அலுவலகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இவ்விணைப்புகளில் பெரும்பாலானவை சென்னை பி.எஸ்.என்.எல்.லின் தலைமை பொது மேலாளரின் பெயரில் பதிவாகியுள்ளது. இவ்விணைப்புகள் அனைத்தும் அதிவேக தகவல்கள் பரிமாற்ற வசதியுள்ள ஐ.எஸ்.டி. என் தொழில்நுட்பத் தன்மையுடையவை. பி.ஆர்.ஏ. வசதி கொண்ட (குரல் தரவுகளை தடையின்றி எடுத்துச் செல்லக்கூடிய தொழில் நுட்பம்) வீடியோ கான்ஃபரன்சிங் போன்றவற்றிற்கு பயன்படக்கூடிய இணைப்புகள். மார்ச் 2007 ஒரு மாதத்தில் மட்டும் 24371515 என்ற ஒரு தொலைபேசி இணைப்பிலிருந்து மட்டுமே 48,72,027 அழைப்பு அலகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இப்படி ஸ்பெக்ட்ரம் ஊழல், மாறன் - மாக்ஸிஸ் - ஏர்செல் கூட்டணி ஊழல், பி.எஸ்.என்.எல். ஊழல் என்று பல ஊழல்களில் சிக்கித் தவிக்கும் மாறன் சகோதரர்கள் தி.மு.க.வாலும், காங்கிரசாலும் கைவிடப்பட்ட நிலையில் நீதி தேவதையின் நியாயத் தீர்ப்பை பெறுவார்கள் என்று நம்புவோம். ஊழல் இல்லா இந்தியா உருவாக இது ஓர் உருப்படியான முன்னுதாரணமாகட்டும்.

source:namvalvu

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails