"2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், இரண்டு வாரங்களாக, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. டில்லி வழக்கறிஞர்கள், நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணை தடைபட்டது. வழக்கறிஞர்கள் யாரும் நேற்று, வாதாட மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு, நீதிபதி ஓ.பி.சைனி, அனுமதியளித்தார். இதையடுத்து, ஒவ்வொருவராக, தங்கள் கருத்துக்களை, சுருக்கமாக, அதிகாரபூர்வமற்ற வகையில், எடுத்து வைத்தனர்.
தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விஷயத்தில், நான் தனிப்பட்ட முறையில் முடிவு எடுத்ததாக, சி.பி.ஐ., கூறுகிறது. ஆனால், 2008 ஜனவரி 6ல், பிரதமர் அலுவலகம், குறிப்பு ஒன்றை அனுப்பியது. அதில், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, முந்தையக் கட்டணத்திலேயே, துவக்க நிலையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அளிக்கலாம் என, கூறப்பட்டிருந்தது. ஆனாலும், பிரதமர் அலுவலகம் மீது, இந்த விஷயத்தில் சி.பி.ஐ., சந்தேகம் தெரிவிக்கிறது. பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது என் கடமை. மத்திய அரசில், 12 ஆண்டுகள் அமைச்சராக இருந்துள்ளேன். அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு கட்டுப்படுகிறேன் என, கூறினேன். இவ்வாறு ராஜா கூறினார்.
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி கூறுகையில்,"கலைஞர் "டிவி' செயல்பாட்டிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள், எப்படி செயல்படுகின்றனர் என்பதும், அங்கு என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதும் எனக்குத் தெரியாது'என்றார். கலைஞர் "டிவி' மேலாண் இயக்குனர் சரத் குமார் கூறுகையில், "கடந்த சில மாதங்களாக, சிறையில் நாங்கள் அவதிப்படுகிறோம். குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் மீது, இன்னும் குற்றப்பத்திரிகை கூட, தாக்கல் செய்யவில்லை'என்றார். தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா மற்றும் ஷாகித் பல்வா உள்ளிட்டோரும், தங்கள் கருத்துக்களை, நீதிபதியிடம் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment