நீத்தி... மதுரை, CSI பல் மருத்துவக் கல்லூரியின் இரண்டாமாண்டு இளநிலை பல் மருத்துவ மாணவி. கூடவே... பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், உலக தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்... என வளர்ந்து கொண்டிருக்கும் இளந்தமிழச்சி!
''எங்கம்மா... பள்ளிக்கூட ஆசிரியை. அவங்களுக்கு பேச்சு, எழுத்து, இலக்கியத்துல எல்லாம் ஆர்வம். நான் நூலைப் போல சேலை. பள்ளியில நடக்கற பேச்சு, எழுத்துப் போட்டிகள்ல முதல் பரிசு எனக்குத்தான். ஐந்தாவது படிச்சப்போ, 'பொதிகை' தொலைக்காட்சியில, திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் நடத்தின பட்டிமன்றத்துல, எங்க அம்மாவுக்கு எதிரணியில உட்கார்ந்து பேசினேன். என் பேச்சை அவ்வளவு ரசிச்சு பாராட்டினார் மணிவண்ணன். 'பொதிகை' தொலைக்காட்சியோ... என் பேச்சுத் திறமைக்கு பரிசா, அம்மாவும் பெண்ணும் வழக்காடற மாதிரி ஒரு நிகழ்ச்சியை எங்கள வெச்சே பதிவு செய்து ஒளிபரப்பினாங்க!''
- பரவசம் விரிகிறது நீத்தியின் வார்த்தைகளில்.
''அடுத்து... சன், ஜெயா, ராஜ்னு எல்லா தொலைக்காட்சிகளோட பட்டிமன்ற நிகழ்ச்சிகள்லயும் பேசினேன். இலக்கிய பட்டிமன்றம் ஒண்ணுல நான் பேசினப்போ நடுவரா இருந்த முனைவர். பாலசுப்பிரமணி, 'நான் எத்தனையோ பேச்சைக் கேட்டிருக்கேன். ஆனா, சரியான லகரம், ளகரத்தோட பேசின சில பேர்ல நீயும் ஒரு ஆள்!'னு பாராட்டினதோட, தான் எழுதப்போற 'தூறல்கள்'ங்கற புத்தகத்துக்கு முன்னுரை எழுதச் சொல்லி என்னை பணித்தார். இப்ப நினைச்சாலும் என்னால நம்ப முடியாத இனிமையான நிகழ்வு அது. என்னோட தமிழ் ஆர்வம், உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துல நிரந்தர உறுப்பினராகற வாய்ப்பை எனக்கு வாங்கித் தந்தது'' என மகிழும் நீத்தியின் தாய்மொழி... தெலுங்கு என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்!
''இசையமைப்பாளர் தேவா, மதுரையில நடத்தின ஒரு மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கற வாய்ப்பும் கிடைச்சது. தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளையும், உள்ளூர் தொலைக்காட்சிகள்ல நிகழ்ச்சி தொகுப்பும் பண்ணினேன். நான் பலகுரல் (மிமிக்ரி) செய்வேன். அந்தத் திறமைதான் சன் தொலைக்காட்சியில ஒளிபரப்பான 'அசத்த போவது யாரு' நிகழ்ச்சியில எனக்கு பேர் வாங்கிக் கொடுத்தது'' என்று பட்டியல் வாசிக்கும் நீத்தி, ஒரு நர்த்தகியும்கூட, ''பத்து வருஷமா கத்துக்கிட்ட பரதத்துல நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். பரதத்துக்கு துணையா பாட்டுப் பாடற திறமையையும் வளர்த்துக்கிட்டேன். கலைஞர் தொலைக்காட்சியோட 'பாடவா டூயட் பாடலை' நிகழ்ச்சியில கலந்துகிட்டு, 'என்னால பாடவும் முடியும்'னு நிரூபிச்சேன்!''
- வியக்க வைத்தன நீத்தியின் திறமைகளும் முயற்சிகளும்.
''நான் பல் மருத்துவரானதும்... ஒரு சேவை மையம் ஆரம்பிச்சு, கைவிடப்பட்ட குழந்தைகள்ல இருந்து முதியோர் வரைக்கும் எல்லாரையும் அரவணைக்கணும்ங்கறதுதான் என்னோட நோக்கம். பரிசுகள் தர்ற சந்தோஷத்தைவிட, அந்த சந்தோஷம் எவ்ளோ பெரிசு!'' - புன்னகையுடன் முடித்தார் நீத்தி!
- பூ.ஜெயராமன்
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
http://thamilislam.tk
No comments:
Post a Comment