Friday, June 10, 2011

அங்கன்வாடி ஊழியரின் மகளுக்கு அமெரிக்க பல்கலையில் படிப்பு

image.png


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் பாத்திமா. அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா தர்வேஷ் (20). நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 3ம் ஆண்டு பயில்கிறார்.


கடந்த ஆண்டு பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் கடந்த ஆண்டு அமெரிக்க தூதரகத்தினர் நடத்திய ஆங்கில பேச்சு போட்டியில், "ஜனநாயகம்' என்ற தலைப்பில் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பி, அதில் சில விமர்சனங்களை சொல்லச்செய்தனர். அதையும் சிறப்பாக செய்த மாணவி ஹலிமாவை அமெரிக்க அரசின் செலவில் 10 மாதங்களுக்கு வடக்கு அலபாமா பல்கலையில் கலாச்சாரம் மற்றும் கம்ப்யூட்டர் கல்விக்கு தேர்வு செய்தனர். மாதம் சுமார் ரூ.12 ஆயிரம் ஊதியத்துடன் தங்கும் வசதி, உணவுடன் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.


10 மாத படிப்பிற்கு பின், தற்போது நெல்லை வந்துள்ள மாணவி ஹலிமா தர்வேஷ் கூறியதாவது: மிகவும் பின்தங்கிய பகுதியில் வளர்ந்த நான் சிறுவயதில் நன்றாக படித்தேன்.என் தந்தை தர்வேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாளராக இருந்தார். நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். அப்பாவின் மரணத்தால், குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. உறவினர்களின் செலவில் மேலப்பாளையம் பெண்கள் கல்லூரிக்கு பயில வந்தேன். அப்போது தான் அமெரிக்க வாய்ப்பு கிடைத்தது. தனியாக என்னை அமெரிக்கா அனுப்புவதற்கு அம்மாவிற்கு மனமில்லை என்றாலும், கல்வி கற்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதற்காக அனுப்பி வைத்தார். கடந்த 10 மாதங்களாக அமெரிக்காவில் நிறைய கற்றுக்கொண்டேன். நவீனமுறையில் கற்றுக்கொடுத்தல், கம்ப்யூட்டர் துறையில் நாம் 5 ஆண்டுகளுக்கு பின்பு படிக்கும் விஷயங்களை அங்கு உடனுக்குடன் கற்றுத்தருகிறார்கள். என்னைப்போலவே ஜோர்டான், இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 88 பேர் அங்கு பயின்றோம்.


பெற்றோரின் பிரிவு தெரியக்கூடாது என்பதற்காக ஹேஸ்டிங்க்ஸ் தம்பதியினர் என்னை குழந்தையாக தத்தெடுத்துக் கொண்டு உதவிகள் புரிந்தார்கள். மாதாமாதம் அமெரிக்கா தந்த உதவித்தொகையை, எங்கள் குடும்ப வறுமையை போக்குவதற்காக வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி முடிந்த பிறகு வீட்டின் தேவைக்காகவும் 11ம் வகுப்பு பயில உள்ள தங்கை ரிஸ்வானாவிற்காகவும் நான் ஏதாவது வேலையில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தொடர்ந்து படித்து ஐ.ஏ.எஸ்., படிப்பேன், என்றார்


source:dinamalar


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails