Tuesday, May 10, 2011
ஏர்வாடி மனநோயாளிகள்
ராமநாதபுரம்: அரசு காப்பகம் அமைப்பதில் தாமதம் ஆவதால், ஏர்வாடி தர்ஹா மனநோயாளிகள் மீண்டும் அடிமை நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் கடந்த 2002 ஆக.,6ல் நாட்டையே உலுக்கிய தீவிபத்து நடந்தது. 28 மனநோயாளிகள் தீயில் கருகினர். மனநோயாளிகளுக்கான காப்பகத்தை குடிசைத்தொழில் போல் பலரும் நடத்தியதே விபத்திற்கு காரணமானது. அங்கு மனநோயாளிகள் சங்கிலியால் கட்டப்பட்டதால் தப்பிக்க வழியின்றி, அத்தனை உயிர்களும் அநியாயமாக பலியாயின. வழக்கம் போல அசம்பாவிதம் நிகழ்ந்த பிறகே அரசு தரப்பு விழித்துக் கொண்டது. அவசரமாக அனைத்து மனநல காப்பகங்களையும் ஒழுங்குபடுத்த முன்வந்தது. அரசே மனநலகாப்பகம் அமைக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்தனர். காப்பகங்களை அமைக்க எந்த துறையின் கீழ் இப்பணியை மேற்கொள்வது என்ற சந்தேகம் அப்போது எழுந்தது. இதுவே அரசு காப்பக பணிகள் முடங்க முதல் காரணமானது. இப்பிரச்னையில் அமைக்கப்பட்ட ராமதாஸ் கமிஷனின் பரிந்துரையின் படி, மாவட்ட மருத்துவமனையில் மனநலபிரிவு தொடங்க, கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி மனநலபிரிவும் ஏற்படுத்தப்பட்டும், அரசு காப்பகம் இல்லாததால் அது பயனின்றி இன்றி உள்ளது.
இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 10 ஆயிரம் மனநோயாளிகளுக்கு ஒருவர், என்ற விகிதத்தில்தான் மனநல மருத்துவர் எண்ணிக்கை உள்ளது. இந்நிலையில் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது எட்டாக் கனியே. மனநோயாளிகளை காப்பகம் மூலம் பராமரிப்பதை தவிர, பெரிய அளவில் தீர்வு காணமுடியாது. தர்ஹா தலைவர் சார்பில் நிலம் அளித்து காப்பகம் நடத்த முன்வந்த நிலையில், இதுவரை அதற்கான எந்த பணியும் நடக்கவில்லை. உள்பிரச்னை காரணமாக தர்ஹா நிர்வாகம் கோர்ட் விசாரணையில் உள்ளது. இதனால் நிர்வாகிகள் இன்றி தர்ஹா செயல்படுகிறது. இந்நிலை ஆறு மாதமாக தொடர்வதால், மனநோயாளிகள் சிதறிப்போக காரணமானது. இதைப்பயன்படுத்தி மீண்டும் குடிசைத்தொழில் மனநலகாப்பகங்கள் முளைக்கத் துவங்கிவிட்டன. தர்ஹா உள்ளேயே மீண்டும் சங்கிலியால் மனநோயாளிகளை கட்டத்தொடங்கி உள்ளனர். மீண்டும் அடிமை நிலைக்கு திரும்பியுள்ள ஏர்வாடி தர்ஹா மனநோயாளிகளுக்கு, இதனால் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மனநோயாளிகள் போர்வையில் குற்றவாளிகள்: முறையான கண்காணிப்பு இல்லாததால் மனநோயாளிகள் போர்வையில் நிறைய குற்றவாளிகள் தஞ்சம் அடைந்திருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
ஏர்வாடி தர்ஹா யாத்திரிகர் நலப்பேரவை தலைவர் அம்ஜத் உசேன் கூறியதாவது: கண்காணிப்பு இல்லாமல் மனநோயாளிகள் போர்வையில் குற்றவாளிகள் அதிகம் தஞ்சம் அடைகின்றனர். கேரள போலீசார் பலமுறை வந்து இங்கு குற்றவாளிகளை கைது செய்து சென்றுள்ளனர். மனநோயாளிகளை மீண்டும் சங்கிலியால் கட்டி சித்திரவதை செய்யத்தொடங்கிவிட்டனர். காப்பாகம் அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. தர்ஹா நிர்வாகம் செயல்பட்டால் இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும், என்றார்.
விதிமுறையால் தாமதமாகும் காப்பகம் : அரசு தரப்பில் காப்பகம் அமைப்பதற்கான முறையான விதிமுறைகள் இல்லாததே தாமத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. தர்ஹா நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் முகமது அமீர் ஹம்சா கூறியதாவது: காப்பாகத்திற்கு நிலம் வழங்குவதாக ஏற்கனவே நாங்கள் கோர்ட்டில் அறிவித்துவிட்டோம். காப்பகம் அமைக்கும் விதிமுறைகள் கேட்டுள்ள நிலையில், இதுவரை கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுக்கு பின் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தர்ஹாவில் மனநோயாளிகளை சங்கிலியால் கட்டுவதை நாங்கள் அனுமதிப்பதில்லை, என்றார்
source;dinamalar
--
http://thamilislam.tk
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment