Thursday, May 26, 2011

ஒரு நாளில் 5.67 லட்சம்; 30 நாளில் 41.14 லட்சம் ரூபாய்க்கு போன் பில்: பயங்கரவாதிகள் சதியா?


சிறிய அளவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்தவரின் அலுவலக தொலைபேசிக்கு ஒரு மாதத்தில் 41 லட்சம் ரூபாய் போன் பேசியதாக தனியார் தொலைபேசி நிறுவனம் பில் அனுப்பியதால், அதிர்ச்சியில் உச்சகட்டத்திற்கே சென்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது.


ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரத்தைச் சேர்ந்தவர் நிசார் அகமது. "பாவா டெவலப்பர்ஸ்' என்ற பெயரில் அரும்பாக்கத்தில் அலுவலகத்தை வைத்து, ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். இவர், தனியார் மொபைல் நிறுவனம் ஒன்றில், "ஐவிஆர்' (இன்டர் ஆக்டிவ் வாய்ஸ் ரெக்கார்டர்) முறைப்படி, அலுவலகத்திற்கு போன் இணைப்பு வாங்கினார். ஒரு மாதம் 7,485 ரூபாய் பேசிக் கொள்ளும் வசதி கொண்டது.இவருக்கு ஏப்., 27ம் தேதியிட்ட டெலிபோன் பில் வந்தது. மார்ச் 17 முதல் ஏப்ரல் 16 வரையிலான இந்த பில் தொகை 5.67 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. மே 16ம் தேதி ஒரே நாளில் 5.67 லட்சம் ரூபாய்க்கு பேசியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் நிசாருக்கு தலையைச் சுற்றியது. ஆப்கானிஸ்தான், தைவான், மியான்மர், தாய்லாந்து நாடுகளுக்கும், சாட்டலைட் போன்களுக்கும் அழைப்புகள் போயிருந்தன.


இதனால் பதறிப்போன நிசார், மே 20ம் தேதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரைச் சந்தித்து புகார் அளித்தார். "சாட்டலைட் உதவியுடன் மர்ம நபர்கள் போன் செய்துள்ளனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரியிருந்தார். இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், மே 18ம் தேதியிட்டு 106 பக்கங்கள் கொண்ட ஒரு பில் வந்தது. அதில், ஏப்., 17 முதல் மே 18 வரையிலான நாட்களுக்கான பில் தொகை 35.47 லட்சம் எனவும், அதற்கு முந்தைய பில்லுடன் சேர்த்து 41.14 லட்ச ரூபாய் கட்ட வேண்டுமென்று இருந்தது. வழக்கம் போல் அந்த பில்லிலும், அயல் நாடுகளுக்கு சாட்டலைட் உதவியுடன் பேசியிருந்தனர். இதனால், நிசார் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியிலும், பீதியிலும் உறைந்தனர்.


இதுகுறித்து நிசார் கூறியதாவது:நான் சிறிய அளவில் ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறேன். இதுவரை வெளிநாட்டிற்குச் சென்றதும் இல்லை; உறவினர்களும் அங்கு இல்லை. என் அலுவலக போனை திருட்டுத்தனமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கும், சாட்டலைட் போன்களுக்கும் மர்ம நபர்கள் பேசியுள்ளனர். தனியார் தொலைபேசி நிறுவனத்தினர் என் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். என் நிறுவனத்தின் மொத்த வரவு செலவே மாதத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் தான். இதைச் சொன்னதும், அந்த தொலைபேசி நிறுவன அதிகாரிகள் திரும்பிச் சென்று விட்டனர்.ஆனால், அடுத்த மாதமே 41 லட்சம் ரூபாய்க்கு நான் பேசியதாக பில் வந்துள்ளது. பயங்கரவாதிகள் யாரும் என் போன் எண்ணை பயன்படுத்தினரா என்று தெரியவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முதல் பில் வந்தபோதே, கடந்த மாதம் 20ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். விசாரணை நடந்து வருகிறது. ஆனால், அடுத்த பில் வந்து என்னை மேலும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதுகுறித்து மீண்டும் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ய உள்ளேன்.இவ்வாறு நிசார் கூறினார்.


இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத சைபர் கிரைம் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ""இந்த புகார் எங்களுக்கு வந்துள்ளது; விசாரணை நடந்து வருகிறது,'' என்று மட்டும் தெரிவித்தார்.



source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails