Friday, February 25, 2011

அதிர்ச்சியூட்டும் தகவல்கள்; அடக்க முயலும் அரசு


வடகொரியாவிலும் வெடிக்குமா மக்கள் கிளர்ச்சி? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்; அடக்க முயலும் அரசு


சியோல் : மத்திய கிழக்கில் தற்போது அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் துவங்கியிருப்பதைப் போல, வடகொரியாவிலும் நடக்கக் கூடும் எனப் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.


வடகொரியாவில் கடந்த 1990க்குப் பின், பொது வினியோகத் திட்டத்தை அந்நாட்டு அரசு புறக்கணித்ததால், பஞ்சம் ஏற்பட்டது. 10 லட்சம் பேர் பசிக் கொடுமைக்குப் பலியாயினர். இந்நிலையில் இம்மாதத் துவக்கத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து தொண்டு நிறுவனங்கள், வடகொரியாவின் வடபகுதியில், சீன எல்லைக்கு அருகில் உள்ள பகுதியில், உணவுப் பாதுகாப்பு குறித்த ஆய்வுகள் நடத்தின.அதில், கடும் பனிப் பொழிவு, கனமழை, கால்நடைகள் மத்தியில் பரவிய தொற்று நோய் இவற்றால், 80 சதவீத அறுவடை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள மோசமான நிலைமை வெளிவந்தது. இந்நிலை நீடித்தால், அப்பகுதியில் உணவின்றி பல லட்சம் பேர் மாளக் கூடும் என்று அந்த அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.


கைவிட்ட அமெரிக்கா: இதையடுத்து, அந்நாட்டு அரசு, பல்வேறு நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனது தூதரகங்கள் மூலம் உணவு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தது. ஆனால், அனுப்பி வைக்கப்படும் உணவுப் பொருட்களை தனது ராணுவத்துக்கு வடகொரிய அரசு பயன்படுத்தும் என்று அஞ்சிய ஐரோப்பிய நாடுகள், ஐ.நா.,வின் உலக உணவுத் திட்ட அமைப்பின் மூலம் அனுப்புவோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டன.இதற்கிடையில், ஏற்கனவே வடகொரியாவின் வடபகுதியில் உணவு வினியோகத்தில் ஈடுபட்டு வரும் உலக உணவுத் திட்ட அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்க்கஸ் ப்ரியர்,"தற்போது சேமிப்பில் உள்ள உணவு கூட இன்னும் ஒரு மாதத்துக்குத் தான் வரும்' என்று மற்றொரு குண்டைப் போட்டுள்ளார்.கடந்த 2009ல், வடகொரியாவுக்கு உணவு வழங்கி வந்த அமெரிக்காவும், அதன் அணுசக்தி உலைகளைப் பார்வையிட ஐ.நா., அணுசக்தி ஏஜன்சி பிரதிநிதிகளை அனுமதித்தால் ஒழிய உணவுப் பொருட்களை அனுப்பப் போவதில்லை என்று கைவிரித்து விட்டது.


வெடிக்குமா போராட்டம்?இந்நிலையில் வடகொரியாவின் வடபகுதியில், உணவுக்காக எந்நேரமும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற தகவல்கள் கிடைத்திருப்பதால், அப்பகுதிகளில், அதிபர் கிம் ஜாங் இல்லின் உத்தரவுப்படி ராணுவம் தனது பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.மேலும், போராட்டத்தைத் துவக்க ஒன்று கூடுவதற்கான முயற்சிகளை முறியடிக்கும் முன்னேற்பாடாக, வடபகுதி மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இணையதளம் மற்றும் மொபைல்போன் சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ரேடியோ மற்றும் "டிவி'க்களில் எகிப்து, லிபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி பற்றிய தகவல்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன.ஆனால், சீனாவில் இருந்து கள்ளத்தனமாகக் கடத்தி வரப்படும் "டிவிடி' மற்றும் மொபைல்போன்கள் மூலம் உலக செய்திகள் ஓரளவுக்கு வடபகுதி மக்களிடம் பரவி வருகின்றன.


அத்தகவல்கள் மக்களிடம் சேருமானால், வடகொரியாவிலும் உணவுக்காக மிகப் பெரும் எழுச்சி ஏற்படும் என்பதை அதிபர் உணர்ந்துள்ளதால், இந்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து ஆய்வு செய்து வரும் நிபுணர்கள், வடகொரியாவில் இணையதளத்தின் மீதான அரசின் முழுக்கட்டுப்பாடு, அதிபர் மீது விசுவாசம் வைத்துள்ள ராணுவம், தொழிலாளர் சங்கங்கள் அல்லது மத அமைப்புகள் அல்லது மற்ற அமைப்புகள் போன்ற மக்களை இணைக்கும் சக்திகள் இல்லாமை ஆகிய காரணங்களால், எகிப்து போன்ற மக்கள் எழுச்சி வடகொரியாவில் ஏற்பட வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.


இதற்கிடையில், தென்கொரிய எல்லையில் இருந்து உணவுப் பொருட்கள் அடங்கிய பலூன்கள் சில. வடகொரியாவுக்குள் பறக்கவிடப்பட்டுள்ளன. அவற்றில், வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறையால் நிகழப் போகும் பெரும் பஞ்சம், லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள எழுச்சி போன்றவை அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் வைக்கப்பட்டுள்ளன.


source:dinamalar
--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails