Sunday, February 6, 2011

கம்ப்யூட்டர் கேள்வி-பதில்

கேள்வி: டேப்ளட் பிசி குறித்து அதிகம் எழுதப்படுகிறது; நாங்களும் கேள்விப்படுகிறோம். சுருக்கமாக, இன்றைய கம்ப்யூட்டர்கள் தராத, டேப்ளட் பிசிக்களில் கிடைக்கும் வசதிகள் என்ன என்று சொல்ல முடியுமா?
-ஆர். சந்திரப் பிரகாஷ், சோழபுரம்
பதில்: இந்த வசதிகள் குறித்து, தாங்கள் கூறுவது போல, கம்ப்யூட்டர் மலரில் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து எழுதிக் கொண்டிருக் கிறோம். வரும் காலத்தில் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பெரிய மாற்றத்தை டேப்ளட் பிசிக்கள் கொண்டுவர இருக்கின்றன. அவற்றின் பயன்கள் பலவாகும். நீங்கள் கேட்பது போல சுருக்கமாகச் சொல்வதென்றால், எங்கும் எளிதாக எடுத்துச் செல்லும் தன்மை, மொபைல் போனாகவும் (3ஜி மற்றும் 4ஜி வசதியுடன்) பயன்படுத்தும் வசதி, வை-பி இணைப்பு, இ-புக் ரீடராகச் செயலாற்றும் திறன், கேம்ஸ் விளையாட உதவிடும் சாதனம், ஆன்லைனில் செய்தி, பாடல், படம் பார்க்கும் வசதி, சமுதாய தளங்களை அணுகும் வசதி எனப் பல அம்சங்களை அடுக்கலாம். நீங்கள் இதற்கெல்லாம் தயாராகிக் கொள்ளுங்கள். அல்லது இப்போதே இங்கு கிடைக்கும் டேப்ளட் பிசிக்களை வாங்கிப் பயன்படுத்துங்கள்.
கேள்வி: வேர்ட் புரோகிராமில் பைல் ஒன்றைத் திறக்க Open மெனுவில் கிளிக் செய்தால் கிடைக்கும் பைல் பட்டியலில் அனைத்து டாகுமெண்ட் பைல்களும் கிடைக்கின்றன. இதற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட எழுத்தில் மட்டும் தொடங்கும் பைல் கிடைத்தால், நான் விரும்பும் பைலை விரைவில் தேர்ந்தெடுக்க எளிதாக இருக்குமே. இதற்கான வசதி உள்ளதா?
-டி. பூர்ண பிரகாஷ், செங்கல்பட்டு.
பதில்: நல்ல கேள்வி. பைல் ஒன்றை வேர்ட் புரோகிராமில் திறக்க விரும்பி, Open ஐகானை அழுத்துகிறீர்கள். உடனே உங்களுக்கு வேர்ட் Open டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டி, கர்சர் File Name என்ற கட்டத்தில் நிற்கிறது. நீங்கள் S என்ற எழுத்தில் தொடங்கும் டாகுமெண்ட் பைல்களின் பட்டியலை மட்டும் பெற விரும்பினால், S*.doc என டைப் செய்து என்டர் தட்டவும். உடன், அந்த ட்ரைவில் உள்ள டைரக்டரிகள், அல்லது போல்டர்கள் முதலாவதாகவும், பின்னர் S என்ற எழுத்தில் தொடங்கும் பைல்கள் அடுத்ததாகவும் கிடைக்கும். இனி இதில் நீங்கள் விரும்பும் பைலைத் தேர்ந்தெடுத்து திறக்கலாம். அதிக பைல்களை ஒரு போல்டரில் வைத்திருக்கையில் இந்த கட்டளை உங்களுக்குப் பயன் தரும். டாகுமெண்ட் பைல்கள் மட்டுமின்றி, வேறு எக்ஸ்டன்ஷகள் கொண்ட பைல்களையும் பட்டியலிட்டுக் கேட்கலாம். எடுத்துக் காட்டாக, டெக்ஸ்ட் பைல் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில் பொதுவாக *.txt எனக் கொடுத்துப் பெறலாம். இந்த வகைப் பைல்களில் S என்ற எழுத்தில் தொடங்கும் பைல் மட்டும் வேண்டும் எனில், S*.txt என டைப் செய்து பட்டியலைப் பெறலாம்.
கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். என் கம்ப்யூட்டரில் 512 எம்பி ராம் மெமரி தான் உள்ளது. இதில் சில நேரங்களில் கேம்ஸ் லோட் செய்திடுகையில், அதற்கேற்ற வகையில் ராம் மெமரி கிடைக்கும் என எப்படி அறிவது?
-சி. பரணிராணி, மதுரை.
பதில்: உங்கள் கேம்ஸ் இயங்கத் தேவையான மெமரி எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியாதே. பின் எப்படி அதற்குப் போதிய மெமரி இருக்கிறதா என அறிவது? ஆனால், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் எந்த நேரத்திலும் நாம் ராம் மெமரியில் எவ்வளவு காலி இடம் உள்ளது என அறியலாம். இதற்கு கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் (Control, Alt,) பட்டன்களை அழுத்திக் கொண்டு டெலீட் (Delete) பட்டனை ஒரு முறை அழுத்தவும். இவ்வாறு அழுத்திய வுடன் கம்ப்யூட்டரில் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் (Windows Task Manager) திரை கிடைக்கும். இதில் உள்ள டேப்களில் Performance என்ற டேபைத் தேர்ந் தெடுக்கவும். இதில் Physical Memory, Available என்ற பிரிவை நீங்கள் காணலாம். இதில் கிடைக்கும் எண் எத்தனை கிலோபைட் இடம் இன்னும் காலியாக உள்ளது என்று காட்டும். இதனை நீங்கள் எம்பி அளவில் பெற வேண்டுமென்றால் 1000 ஆல் வகுக்க வேண்டும். தோராய மான அளவில் எத்தனை எம்.பி. எனத் தெரிய வரும்.
கேள்வி: என் கம்ப்யூட்டர் டூயல் கோர், எக்ஸ்பி வகையைச் சேர்ந்தது. இதில் திடீரென வால்யூம் ஐகானைக் காணவில்லை. என்ன நடந்தது எனத் தெரியவில்லை. ஆனால் சவுண்ட் எல்லாம் சரியாக வருகிறது. எங்கு பிரச்னை?
-என். காமராஜ், திருமங்கலம்.
பதில்: உங்கள் டாஸ்க் பாரில் வலது மூலையில் கடிகாரத்திற்கு அடுத்ததாக அமர்ந்து கம்ப்யூட்டர் தரும் ஆடியோ அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஐகானைக் கானவில்லையா? என்ன செய்திடலாம்? உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளதா? முதலில் Start ––> Control Panel செல்லுங்கள்; பின் Sounds, Speech and Audio Devices என்ற தொடர்பில் கிளிக் செய்திடவும். இதனை அடுத்து Sounds and Audio Devices என்ற இடத்தில் கிளிக் செய்து அப்பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது டேப்கள் உள்ள டயலாக் பாக்ஸ் ஒன்று தோன்றும். இதில் Volume டேப் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதில் "Place volume control icon in the taskbar" என்பதன் எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் உள்ளதா எனக் கண்டறியுங்கள். இல்லை எனில் அதனை ஏற்படுத்தவும். இப்போது ஒலி அளவை மாற்ற உதவும் ஐகான் உங்கள் டாஸ்க் பாரில் அமர்ந்திருக்கும். இதனைப் பயன்படுத்தி உங்களுக்குப் பிரியமான பாடலை பிடித்த அளவிலான ஒலியோடு கேட்டு மகிழலாம். 
கேள்வி: நான் பெரும்பாலும் தமிழில் பெயர்களை டைப் செய்துவிட்டு இனிஷியலை ஆங்கிலத்தில் அமைக்க, பாண்ட் சென்று மாற்றி ஆங்கில எழுத்தினைக் கொண்டு வந்து பின் மாற்ற வேண்டியுள்ளது. வேறு சுருக்கு வழி உள்ளதா?
-எம். வெங்கடேச பெருமாள், திண்டுக்கல்.
பதில்: நீங்கள் தமிழ் டைப் செய்திட என்ன சாப்ட்வேர் அல்லது ட்ரைவர் பயன்படுத்துகிறீர்கள் என்று குறிப்பிட வில்லை. பொதுவாக யூனிகோட் எழுத்தில் நீங்கள் டைப் செய்தால், நீங்கள் பயன்படுத்தும், தமிழுக்கான ட்ரைவரிலேயே, ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறிக் கொள்ள ஏதேனும் இரண்டு கீகளை இணைத்துப் பயன்படுத்துமாறு தந்திருப்பார்கள். அல்லது நீங்களே அமைத்துக் கொள்ளுமாறு வைத்திருப்பார்கள். அவற்றைப் பயன்படுத்தினாலே போதும். உடன் ஆங்கில எழுத்தில் டைப் செய்திடலாம். பின்னர், உடனே மீண்டும் தமிழுக்கு மாறிவிடலாம். இந்த எழுத்துவகையில் ஆங்கிலமும் தமிழும் ஒரே எழுத்துவகையில் இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். டிஸ்கி (TISCII) என்ற எழுத்து வகையிலும் இதே போல இருக்கும். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மாறுவதற்கு, எடுத்துக் காட்டாக, ஆல்ட் + கே வைத்திருந்தால், இதனை மட்டும் அழுத்தினால் போதும். 
கேள்வி: வேர்ட் தொகுப்பில் உருவாக்கும் டாகுமெண்ட்களில் பல சொற்களின் கீழாக அன்டர்லைன் செய்கையில் சொற்களுக்கு இடையே கோடில்லாமல் சொற்களுக்கு மட்டும் கோடிடுவது எப்படி?
-என்.மல்லிகா, பொள்ளாச்சி. 
பதில்: முதலில் எந்த சொற்களுக்குக் கீழ் அடிக்கோடு வர வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Ctrl + Shift + W என்ற கீகளை அழுத்தவும். இப்போது சொற்களின் கீழாக மட்டும் அடிக்கோட்டினைப் பார்க்கலாம். சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் கோடு இருக்காது. இதுவும் ஒரு அழகுதான். 
கேள்வி: வேர்டில் டெக்ஸ்ட் காப்பி செய்து ஒட்ட கண்ட்ரோல்+சி மற்றும் கண்ட்ரோல் +வி பயன்படுத்துகிறேன். ஆனால் என் நண்பரின் கம்ப்யூட்டரில் இன்ஸெர்ட் கீ அழுத்தினாலே, டெக்ஸ்ட் பேஸ்ட் ஆகிறது. இருவரும் ஆபீஸ் 2003 தான் பயன்படுத்துகிறோம். சிஸ்டம் எக்ஸ்பி.
-சி.மோகன், சென்னை.
பதில்: இன்ஸெர்ட் கீ அழுத்தினால் டெக்ஸ்ட் ஒட்டப்பட வேண்டுமானால், உங்கள் வேர்ட் புரோகிராமில் கீழ்க்காணும் செட் அப் வழிகளை மேற்கொள்ளவும். 
மெனு பாரில் Tools கிளிக் செய்து பின் விரியும் மெனுவில் இறுதியாக உள்ள Options என்பதனைக் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் பல டேப்களில் Edit டேபினைக் கிளிக் செய்தால் பல செக் பாக்ஸ் கிடைக்கும். அதில் "Use the INS key for paste" என்ற செக் பாக்ஸ் முன் டிக் அடையாளத்தை ஏற்படுத்திப் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி ஏதாவது காப்பி அல்லது கட் செய்த டெக்ஸ்ட் அல்லது படத்தை ஒட்ட வேண்டுமானால், இன்ஸெர்ட் கீயைக் கிளிக் செய்தால் போதும். கிளிப் போர்டில் உள்ள படம் அல்லது டெக்ஸ்ட் ஒட்டப்படும். 
கேள்வி: எக்ஸெல் தொகுப்பில் Proper என்ற பங்சன், எந்த வகை கணக்கில் பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன் என்ன? பார்முலா அமைக்கலாம் என்றால், அதன் வடிவம் என்ன? 
-கே. இன்பசேகரன், திருவில்லிபுத்தூர்.
பதில்: இது எக்ஸெல் ஒர்க்புக்கில் செல்களில் அமைக்கப்படும் பெயர்களுக்கானது ஒரு செல்லில் உங்கள் பெயரை A1 செல்லில் inbasekaran என்று டைப் செய்திடுங்கள். எப்படி என் பெயர் முதல் எழுத்தை சிறிய எழுத்தாக டைப் செய்தீர்கள் என்று கோபம் வருகிறதா! உடனே இன்னொரு செல், செல்லுங்கள். B1 என வைத்துக் கொள்வோம். இங்கு =PROPER(A1) என பார்முலா கொடுங்கள். உடனே அந்த செல்லில் உங்கள் பெயர் Inbasekaran எனக் காட்டப்படும். புரிகிறதா! இந்த கட்டளை எதற்கென்று. 

 


source:dinamalar


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails