ஓசூர்: சூளகிரி கோவிலில், குரங்கு ஒன்றின் தொண்டையில் தேங்காய் சிக்கியதால், உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்ற, பக்தர்கள் சிகிச்சைக்கு எடுத்துச் சென்றனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் குரங்கு இறந்ததால், சோகமடைந்த பக்தர்கள், குரங்கின் உடலுக்கு மாலை அணிவித்து அடக்கம் செய்தனர்.
சூளகிரி அருகே, பஜார் தெருவில், செல்லாபிரியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளன. இந்த கோவில் வளாகத்தில், குரங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், பூஜையில் படைத்த, பழங்கள், தேங்காய் மற்றும் உணவு பண்டங்களை குரங்குக்கு வழங்குவர். நேற்று, வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள், குரங்குக்கு, தேங்காய் வழங்கியுள்ளனர்; அவற்றை, குரங்குகள் எடுத்து சாப்பிட்டன. தேங்காய் சாப்பிட்ட ஒரு குரங்குக்கு, அது, தொண்டையில் சிக்கியதால், கீழே விழுந்து, கோவில் வளாகத்தில், துடிதுடித்து உயிருக்கு போராடியது. இதை பார்த்த மற்ற குரங்குகள், அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டன. இதனால், பக்தர்கள், உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு, காப்பாற்ற முயன்றனர். வாணியர் தெருவை சேர்ந்த சிவக்குமார் என்பவர், குளிர்பானம் வாங்கி வந்து குரங்கு வாயில் ஊற்றி, தனது மூச்சை அதன் வாயில் செலுத்தி காப்பாற்ற, பல்வேறு வகையில் முயற்சி செய்தார்.
குரங்கு மயக்கமடைந்ததால், கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். டாக்டர் சீனிவாசனும், உயிருக்கு போராடிய குரங்குக்கு ஊசி போட்டு காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல், சிறிது நேரத்தில் குரங்கு இறந்தது. இதனால் சோகமடைந்த பக்தர்கள், இறந்த குரங்கின் உடலுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பின், கோவிலுக்கு அருகே உள்ள நிலத்தில், இறந்த குரங்கின் உடலை அடக்கம் செய்தனர். இச்சம்பவம், சூளகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
http://thamilislam.tk
No comments:
Post a Comment