Wednesday, December 21, 2011

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வர நிதியுதவி - ஜெயலலிதா அறிவிப்பு

 

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வர அரசின் சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், ஜெயலலிதா உரை  நிகழ்த்தினார். அப்போது, அவர் இதைத் தெரிவித்தார். அவர் ஆற்றிய உரை விவரம்:

அன்பின் உருவமாகவும், கருணையின் வடிவமாகவும் விளங்கும் இயேசு பெருமான் அவதரித்த நாள் கிறிஸ்துமஸ் திருநாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.'பகைவனுக்கும் அருளுங்கள்'; 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு' போன்ற ஏசுபிரானின் அருள் வசனங்கள் அழியாப் புகழ் பெற்றவை.  இயேசு பெருமானின் காந்த விழிகளும், அவரது அன்பு ததும்பும் மொழிகளும் உலகப் பிரசித்தி பெற்றவை. தன்னை சிலுவையில் அறைந்தவர்களைக் கூட மன்னிக்கும்படி பரம பிதாவிடம் மன்றாடியவர் இயேசுபிரான். மன்னிப்பதன் மூலம் மன்னிக்கிறவர் மட்டுமல்லாமல், மன்னிக்கப்படுகிறவரும் உயருகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக, உங்களுக்கெல்லாம் ஒரு சிறிய சம்பவத்தை கூற விழைகிறேன். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன், மன்னித்து அருளுவது  என்ற  கொள்கையில் மிக உறுதியாக இருந்தார்.நீதிமன்றங்கள் மரண தண்டனையை விதித்தாலும், அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த தண்டனையை குறைத்து விடுவார். அதற்காக அவரைப் பலர் விமர்சனம் செய்தனர். ஒரு நாள் அவர், போர்க்களத்தை பார்வையிட்ட போது,  ஒரு ராணுவ வீரன் தன் கழுத்தில் இருந்த செயின் பேழையை முத்தமிட்டபடி  செத்துக் கிடந்ததைப் பார்த்தார்.
      
அதில் அவனது மனைவி அல்லது காதலி படம் இருக்கலாம் என்று கருதி அதை எடுத்துப் பார்த்தார் ஆபிரகாம் லிங்கன்.  அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி.  காரணம், அதில் இருந்தது ஆபிரகாம் லிங்கனின் படம்.  அந்த ராணுவ வீரன் குறித்து விசாரித்த போது, அவன் மரண தண்டனை பெற்ற குற்றவாளி; ஆபிரகாம் லிங்கனால் மன்னிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றிருந்தான். போர் வந்ததும் சிறைக் கைதிகளுக்கு ராணுவப் பயிற்சி தரப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்பட்டனர். போரில் அவன் நாட்டுக்காக தன் உயிரைத் துறந்து தியாகி ஆகிவிட்டான் என்பது தெரிய வந்தது.இதை நான் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், அனைவரும் பழியுணர்ச்சி இன்றி, பகை இன்றி, சுயநலம் இன்றி, அன்புடனும், அமைதியுடனும், தியாக உணர்வுடனும் வாழ வேண்டும் என்பதற்காகத் தான்.சுயநலத்துடன் வாழும் வாழ்க்கை ஆரம்பத்தில் இனிக்கும்; பின்பு கசக்கும்.   சுயநலமின்றி பிறருக்காக வாழும் வாழ்க்கை; விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கை; ஆரம்பத்தில் கசப்பாக இருந்தாலும் முடிவில் இனிமையாக இருக்கும். "தியாகம் செய்தவர்கள் தியாகம் செய்து இருக்கிறோம், என்ற எண்ணத்தையும், தியாகம் செய்தால் தான் தியாகம் பூரணம் அடைகிறது", என்ற தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் அமுத மொழியையும் உங்களுக்கு இந்தத் தருணத்தில் எடுத்துக் கூறி; இயேசு நாதரின் போதனைகளான, தியாகம், மன்னிப்பு, அன்பு, சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினை தெரிவித்துக் கொண்டு, தமிழ் நாட்டில் அமைதி நிலவவும்; தொழில் மற்றும் விவசாய உற்பத்தியில்  புரட்சி ஏற்படுத்தவும்; மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடையவும்; அனைத்துத் துறைகளிலும் தமிழ் நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கவும்; எனது அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
        
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கொண்டாடிய போது ஒரு சில வாக்குறுதிகளை நான் உங்களுக்கு அளித்திருந்தேன். அதன் அடிப்படையில், கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான, ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தத் திட்டம் அனைத்து கிறிஸ்துவப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக அமையும்.  முதற்கட்டமாக, 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலம் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களின் நல்லாதரவுடன், இறைவனின் திருவருளால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நான்,  உங்களது இதர கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றுவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்; ஒவ்வொரு மனிதனும் என் சகோதரன் என்ற பாச உணர்வோடு பயணிப்போம்; இறைமகன் இயேசுபிரான் தன் பிறப்பிலும், வாழ்விலும் நமக்குக் கூறும் நற்செய்தியின்படி வாழ்ந்து; உலகை மகிழ்ச்சிப் பூங்காவாக மாற்றுவோம்; யார்  எனக்கு எதைச் செய்தாலும், நான் எல்லோருக்கும் நன்மையே செய்வேன்" என்ற அர்ப்பணிப்பு உள்ளத்தோடு வாழ்வோம் என்பது தான் அனைவருக்கும் நான் கூறும் கிறிஸ்துமஸ் செய்தியாகும்.
     
இன்றைய தினம் இந்த விழாவில் நேரம் போனதே தெரியவில்லை.  நீங்கள் அனைவரும் என் மீது பொழிந்த அன்பையும், இங்கே மேடையில் பேசிய பேராயர்களும், பிஷப்புகளும், கிறிஸ்தவ மத பெரியவர்களும் என் மீது பொழிந்த ஆசீர்வாதங்களை கேட்கும் போது, உள்ளபடியே நான் பூரிப்படைகிறேன்.  அது மட்டுமல்ல, இன்று மிக இனிமையாக பாடல்களை பாடி அசத்திய இளம் தங்கைகளுக்கும், தம்பிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  குறிப்பாக, சர்ச் பார்க் கான்வென்ட்டில் இருந்து வந்திருக்கின்ற மாணவிகள் பாடிய இனிமையான பாடல்களைக் கேட்கும் போது, என்னுடைய பள்ளி நாட்கள் என் நினைவுக்கு வந்தன.  எத்தனையோ முறை இந்த தங்கைகளைப் போல் நானும் அங்கே பள்ளிக் கூட மேடையில் நின்று கிறிஸ்துமஸ் பாடல்களை பாடி இருக்கிறேன். அனைவர் வாழ்விலும் அமைதியும், ஆனந்தமும் தவழட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்! செல்வம் செழிக்கட்டும்! அமைதி நிலவட்டும்! என்று வாழ்த்தி; அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்...- இவ்வாறு முதல்வரின் உரை அமைந்திருந்தது.


source:4tamilmedia


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails