Tuesday, November 1, 2011

கம்ப்யூட்டர் கேள்வி பதில்



கேள்வி: Abandonware என்று எதனைக் குறிக்கின்றனர்? இது மால்வேர் வகையைச் சேர்ந்ததா?

-கே. கிருஷ்ணன், விருதுநகர்.
பதில்: இல்லை, இல்லவே இல்லை. அபான்டன் வேர் (Abandonware) என்பது, சாப்ட்வேர் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு, சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழிந்த பின்னர் விற்பனைக்கு அனுப்பாமலும், விநியோகிக்கப் படாமலும் உள்ள சாப்ட்வேர் புரோகிராம்களாகும். பழைய கேம்ஸ் புரோகிராம்கள் இந்த வகையைச் சேர்ந்தவையே. இன்னும் நிறைய எடுத்துக்காட்டுக்களைக் கூறலாம். கூகுள் அல்லது ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினில் Abandonware என டைப் செய்து தேடிப் பாருங்கள். எத்தகைய புரோகிராம்கள் பட்டியலிடப் படுகின்றன என்று அறியலாம்.

கேள்வி: நான் வாங்கப்போகும் லேப்டாப் கம்ப்யூட்டரில் ஓ.எஸ். பதிக்க, விண்டோஸ் 7 தேர்ந்தெடுத்தேன். ஆனால் அந்த ஓ.எஸ். பல நிலைகளில் வந்துள்ளதாக கடைக்காரர் கூறுகிறார். மொத்தம் எத்தனை வகை? எதனைத் தேர்ந்தெடுப்பது?
-நி. முருகேச பாண்டியன், மதுரை.
பதில்: உங்களுடைய தேவை மற்றும் உங்கள் பயன்பாடு பற்றி எதுவும் எழுதவில்லை. எனவே எது உங்களுக்கு உகந்தது என்று நீங்களே அதன் அம்சங்கள் குறித்துப் படித்துத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் 7 பதிப்பு வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற ஆறு வகைகளில் வெளிவந்துள்ளது. அவை: விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல், ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக், என்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இவற்றின் கூறுகள் மற்றும் பயன்கள் குறித்து பல இணைய தளங்களில் தகவல்கள் உள்ளன. இவற்றின் விலை ரூ.5,800 முதல் ரூ. 11,000 வரை உள்ளது. மேலும் உங்கள் கம்ப்யூட்டரின் திறன் அடிப்படையில் 32 பிட் அல்லது 64 பிட் வகையினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் பழைய எக்ஸ்பி புரோகிராம்களையும் இதில் இயக்க விரும்பினால், புரபஷனல் மற்றும் அல்டிமேட் பதிப்பை வாங்க வேண்டியதிருக்கும். பொதுவாக விண்டோஸ் 7 பதிப்பில், இந்த இரண்டு வகை மட்டுமே அதிகமாக, கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளது.

கேள்வி: இன்டர்நெட் தளஙகளின் பெயர்கள் எண்களில் தான் உள்ளது. ஆனால் நாம் பெயர்களை வைத்துக் கொள்கிறோம். இதனை மாற்றும் வேலையை டி.என்.எஸ். சர்வர்கள் செய்கின்றன என்று முன்பு எழுதி இருந்தீர்கள். ஏன் எண்களையே வைத்துக் கொள்ளக் கூடாது? இந்த விதியை யார் கொண்டு வந்தது?
-என். ஆல்வின் சாமுவேல், திருப்பூர்.
பதில்: ஆஹா! உங்கள் எண்ணப் படியே, ஊர்களுக்கு எண்களை வைத்துப் பாருங்கள். கண்டக்டரிடம் 38567 லிருந்து 23483க்கு ஒரு டிக்கட் கொடுங்க என்று கேட்டால் என்ன செய்வார்? எத்தனை எண்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியும்? எத்தனை இணைய தளங்களுக்கு எண்களை நினைவில் கொள்ள முடியும்? எனவே தான் இன்டர்நெட் வடிவமைக்கப் படுகையில், எண்களை சர்வர்கள் படிக் கட்டும், நாம் பெயர்களைக் கொள்வோம் என்று அமைத்தார்கள். இதற்கென விதி எதுவும் தரவில்லை. பொதுவான ஏற்பாடுதான்.

கேள்வி: வேர்டில் பேஜ் பிரேக் போல வேறு என்ன வகை பிரேக் ஏற்படுத்தலாம்? ஏற்படுத்திய பிரேக் இடைவெளியை, கோடுகளை நீக்கும் வழியையும் குறிப்பிடவும்.
-என். ரமணி, மதுரை.
பதில்: பேஜ் பிரேக், செக்ஷன் பிரேக் எனப் பல உள்ளன. பேஜ் பிரேக் ஏற்படுத்த, குறிப்பிட்ட இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று, கண்ட்ரோல் கீயை அழுத்தியபடி என்டர் தட்டவும். இதனை மெனு பார் வழியாகவும் மேற்கொள்ளலாம். அதே இடத்தில் வேறு பிரேக் வகைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
இன்ஸெர்ட் மெனு சென்று அதில் முதலாவதாகக் கிடைக்கும் பிரேக் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். சிறிய பாக்ஸ் ஒன்றுகிடைக்கும். அதில் பிரேக் டைப்ஸ் மற்றும் செக்ஷன் பிரேக் டைப்ஸ் என்ற இரண்டு வகை பிரேக் பிரிவுகள் இருக்கும். உங்களுக்கு எந்த வகை பிரேக் வேண்டுமோ அதற்கான ரேடியோ பட்டனைத் தேர்ந் தெடுத்து பின் ஓகே கிளிக் செய்திடலாம். இங்கு அனைத்து வகை பிரேக் குறித்தும் தகவல் கிடைக்கும்.
ஏற்படுத்திய பிரேக்கினை எப்படி நீக்குவது? டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். டாகுமெண்ட் நார்மல் வியூவில் இருக்க வேண்டும். இதற்கு வியூ மெனுவில் நார்மல் தேர்ந்தெடுக் கவும். இந்த வியூவில் தான் பேஜ் பிரேக் கோடாகத் தெரியும். பேஜ் பிரேக் உங்கள் டாகுமெண்ட்டில் புள்ளிகள் வைத்த பெரிய நீண்ட கோடாகக் காட்சி அளிக்கும். பேஜ் பிரேக் உள்ள இடத்திற்குச் செல்லவும். அங்கு கர்சரை வைத்து டெலீட் பட்டன் அழுத்தினால் பேஜ் பிரேக் நீக்கப்படும். அல்லது அம்புக் குறி கர்சரை பேஜ் பிரேக் கோட்டில் இடது மூலைக்குக் கொண்டு சென்று கிளிக் செய்தால் பேஜ் பிரேக் கோடு தேர்ந்தெடுக் கப்படும். பின் டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் அழுத்தி இதனை நீக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். இதில் விண்டோஸ் எக்ஸ்புளோரரில், கார்ட் ரீடர் போன்ற காலியாக உள்ள ட்ரைவ்கள் காட்டப்படுவதில்லை. சிஸ்டமே இப்படித்தான் உள்ளதா? அல்லது என் கம்ப்யூட்டரில் செட்டிங்ஸ் மாறிவிட்டதா? இதனைக் கொண்டு வர என்ன செய்திட வேண்டும்?
-கா. சிரோன்மணி ராணி, காரைக்கால்.
பதில்: மாறா நிலையில், விண்டோஸ் 7, காலியாகவுள்ள ட்ரைவ்களைத் தன் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் காட்டு வதில்லை. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமும் பதில் இல்லை. ஆனால், இதனைக் காட்டும்படி சில மாற்றங்களை மேற்கொள்ளலாம். 
ஸ்டார்ட் பட்டன் அழுத்தவும். இந்த பட்டனுக்கு மேலாக உள்ள சர்ச் பாக்ஸில் Change Search Options என டைப் செய்திடவும். உடன், பல முடிவுகள் மேலாகக் காட்டப்படும். இதன் தொடக்கத்தில், Change Search Options for files and folders என்று ஒரு வரி கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் விண்டோ வில் வியூ டேப்பினைக் கிளிக் செய்திடவும். பின்னர், ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லவும். அங்கு Hide empty drives in the Computer folder என்று இருப்பதனைக் காணவும். இதன் முன்னால் காணப்படும் டிக் அடையாளத்தின் மீது மவுஸ் கர்சரால் கிளிக் செய்தால், டிக் அடையாளம் எடுக்கப்பட்டுவிடும். பின்னர், Apply மற்றும் OK பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இனி எந்த மீடியாவினை உங்கள் கம்ப்யூட்டரில் இணைத்தாலும், அந்த ட்ரைவ் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் காட்டப்படும்.

கேள்வி: என் மகள் ஒன்பதாம் வகுப்பில் படிக்கிறாள். நான் வீட்டில் இருக்கிறேன். மகள் கம்ப்யூட்டர் நன்றாக இயக்குவாள். அவளுக்கு ஆர்வமூட்டும் வகையில் பிசிக்ஸ் கற்றுத்தரும் இன்டர்நெட் வெப்சைட்கள் ஏதேனும் சிலவற்றைக் கூறவும்.
-க.ராணி சதீஷ், மேலூர்.
பதில்: மகளின் கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டுள்ள உங்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் வீட்டில் இருந்தாலும், கம்ப்யூட்டரில் மகளுக்குத் தேவையானதைக் காட்டி, கல்வியில் வழி காட்டலாம். இயற்பியல் பாடத்திற்கு நான் பார்த்த நல்லதொரு இணையதளம் பற்றிய தகவல்களைத் தருகிறேன். இந்த தளத்தின் பெயர் Crayon Physics. இதன் தள முகவரி http://crayonphysics.en.softonic.com/download. நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஆர்வ மூட்டும் விளையாட்டு மூலம் இது இயற்பியலைக் கற்றுத் தருகிறது. இந்த விளையாட்டில் ஒரு பந்தினை நட்சத்திரக் குறியிட்ட இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இதனைக் கொண்டு செல்ல பல வழிகள் தரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் இயற்பியல் கோட்பாடுகளின் எளிய விதிகளை விளையாட்டாகக் கற்றுக் கொடுக்கின்றன.
இந்த விளையாட்டு ஒரு இரண்டு பரிமாணக் காட்சியில் காட்டப்படுகிறது. பிசிக்ஸ் பிரிவின் gravity, momentum, inertia, mass, friction, kinetic and potential energy எனப் பல கோட்பாடுகள் விளையாட்டு மூலம் விளக்கப்படுகிறது. எந்த லெவலில் குழந்தைகள் விளையாடலாம் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். நன்கு கற்று அறிந்தவர்கள் வெறும் விளையாட்டாகவும் இதனை எடுத்துக் கொண்டு பொழுதைப் போக்கவும் செய்திடலாம். ஆனால் விளையாடு கையில் சிந்திக்கும் திறனை நன்கு வளர்க்கும் விதத்தில் இந்த கேம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

source:athirvu

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails