Thursday, October 20, 2011

. "அஷ்வத் பயங்கரமான ஆளு... அவனை முந்தானையில் முடிஞ்சிக்கோ...'

பட்டாம்பூச்சிகளின் கதை! (8)

அன்பு வாசகர்களே... "என்னடா­... எப்பப் பார்த்தாலும், பட்டாம்பூச்சிகளின் கதையில் ஒரே சோக கீதம்தான் வாசிக்கப்படுகிறது. கொஞ்சமும் இனிய கீதம் வாசிக்கப் படுவதில்லையே...' என, சிலர் எழுதியிருந்தீர்கள். உங்களுக்காகவே நான் சந்தித்த, இந்த வெற்றி ஜோடியின் வாழ்க்கையை எழுதுகிறேன்...
நம் கதாநாயகன், கோடிகளில் புரளும் கோடீஸ்வரனின் மகன். இளவட்டம்; அபார மூளை. தங்கள் குடும்ப தொழிலை, தன்னுடைய இளம் மூளையை பயன்படுத்தி, மிக, மிக உயரத்துக்கு கொண்டு வந்து விட்டார். இளம் வயதிலேயே அளவுக்கு மிஞ்சிய பணம், புகழ். பிறகென்ன, நட்பு வட்டாரம் சேர கேட்கவா வேண்டும்; ஏகப்பட்ட நண்பர்கள்.
ஹீரோவின் பெயர் அஷ்வத்; சரியான ஜாலி பேர்வழி. கிண்டல், சுண்டல் என, வாழ்க்கை ஜாலியாகப் போக, ஏகப்பட்ட பெண் தோழியர்.
அரசல் புரசலாக மகனின் செய்தி காதில் விழ, உஷாரானார் அப்பா. "மகனைச் சுற்றியுள்ள பெண்கள், அவனை மடக்கிப் போட்டுட்டா என்ன செய்வது...' என பயந்த அப்பா, சாதாரணமான மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த, அப்பாவி பெண்ணை பார்த்து, மகனுக்கு முடிவு செய்தார். "மிஸ் யுனிவர்ஸ்' போன்ற பெண்களுடன் சுற்றித் திரிந்த அஷ்வத், அப்பா சொல்லை தட்டாமல், அப்பிராணி பெண்ணை மணந்தார். இதுதான் நம் ஹீரோவின் சாதனை.
பிறகென்ன, வழக்கம் போல் ஜாலி லைப்தான். "அஷ்வத் பயங்கரமான ஆளு... அவனை முந்தானையில் முடிஞ்சிக்கோ...' என, புகுந்த வீட்டு சமையல்காரி முதல், அனைவருமே ஹீரோயினை எச்சரித்தனர்.
விழித்தாள் ஹீரோயின்; வயிற்றை பயம் சுருட்டி எடுத்தது. மிகவும் ஒழுக்கமாக வளர்க்கப்பட்ட ஹீரோயின், பூஜை, புனஸ்காரம், மாமியார், மாமனார், நாத்தனாரை அட்ஜஸ்ட் செய்து போவதில், கில்லாடியாக இருந்தாள்.
அஷ்வத் வெளியில் சுற்றினாலும், அன்பான, எதிர்த்துப் பேசாத, பிரச்னை இல்லாத மனைவியாக இருந்ததால், அவளை மிகவும் நேசிக்க ஆரம்பித்தான்.
"டேய் அஷ்வத்... உன் மனைவி அப்பாவியா இருப்பதால், நீ எங்கு போனாலும், வந்தாலும் கண்டுக்க மாட்றாங்க. நீ கொடுத்து வச்சவண்டா... எங்காளுங்கல பாரு... விடிந்ததும் லேடீஸ் கிளப், ஷாப்பிங், மாதர் சங்கம் என சுத்துறாளுக... பிள்ளைகளை ஒழுங்கா பாக்க மாட்றாளுங்க... பத்தாததற்கு அப்பப்ப போன் போட்டு, "நீ எங்க இருக்க... எவ கூட சுத்துற...' என, பாடாய் படுத்துறாளுக. இவள்களை வச்சிக்கிட்டு ஒருத்திய கூட, "சைட்' அடிக்க முடியல மச்சான்!' என, நண்பர்கள் புலம்பி தீர்த்தனர்.
இதற்கிடையில் அஷ்வத்துக்கு, இரண்டு குழந்தைகள் பிறந்தன. அப்பவும் குடும்பப் பொறுப்பில்லாமல், பிசினசில் மட்டும் சிகரத்தை தொட்டார் அஷ்வத். நம் ஹீரோயினின் தோழிகள், "என்னடீ... உன் கணவர் அப்படி, இப்படின்னு பேசிக்கிறாங்களே... உனக்கு கோபம் வரல... நீ சண்டை போட மாட்டியா? எப்படி இதை எல்லாம் தாங்கிக்கிற...' என்றனர்.
"என்ன செய்ய சொல்ற... எனக்கு எந்த விஷயமும் தெரியாது என உறுதியா நம்புறார். என் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை வச்சிருக்கிறார். அதை நான் கெடுத்துக்க விரும்பல... அந்த பயம் அவருக்கு இருக்கட்டும். இதையும் மீறி நான் சண்டை போட்டால் என்னாகும்? " ஆமாம்... வச்சிருக்கேன்...'ன்னு, "முதல் மரியாதை' சிவாஜி ஸ்டைலில் சொல்லிட்டா என்ன செய்வது? என் பிள்ளைகளின் வாழ்க்கை, எதிர்காலம் எல்லாமே, எங்களுடைய சண்டையால் பாதிக்கப்படும். புகுந்த வீட்டில் என்ன பிரச்னை என்றாலும், அதை வெளியே தெரியாமல், மூடி மறைத்து, குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டியது, ஒரு பெண்ணின் கடமை அல்லவா... என்னுடைய ஆத்திரத்தால், என் வாழ்க்கையை நானே அழித்துக் கொள்ள விரும்பவில்லை. என் பிள்ளைகளுக்காக, நான் இந்த தியாகத்தை செய்வதால், இன்று, எங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக போய்கிட்டிருக்கு...' என்றாள்.
"ஏய்... நீயா அப்பாவிப் பெண். கில்லாடி குயின்டி. எப்படி கில்லியா பேசுறா பாரு... நாமளும் தான் இருக்கோமே... எதுக்கெடுத்தாலும் கணவனை சந்தேகப்பட்டு, இல்லாததையும் இருப்பதாக கற்பனை செய்து, சண்டை போட்டு திரிகிறோம்... இது, எங்களுக்கும் ஒரு பாடம் டீ!' என்றனர் மேல்தட்டு மங்கையர்.
அஷ்வத்தின் குணமறிந்து, மிகவும் பக்குவமாக, அன்பாக நடந்து கொண்டதால், இன்று அஷ்வத்தும், "மை ஒய்ப்... மை ஒய்ப்...' என, விழுந்து கிடக்கிறான். மனைவிக்கு மசாஜ் பண்ணுவதென்ன... பணத்தையும், அன்பையும் கொட்டுவதென்ன என, ஆளே மாறி போயிட்டான்.
நண்பர்கள் எல்லாம் ஆச்சரியப்படுவது ஒருபக்கம் இருக்க, "நம்ப மருமகள் எத்தனை சமத்து... எத்தனை நல்லவள்!' என, குடும்பமே, தலையில் வைத்து கொண்டாடுகிறது. இன்று இவர்கள் மிகவும், "சக்சஸ்புல் ஜோடி!'
ஹீரோயின், தன் பிள்ளைகளையும், சில கோடீஸ்வர வீட்டு பிள்ளைகளைப் போல, தறுதலைகளாக வளர்க்காமல், நல்ல ஒழுக்கம், பக்தி நிறைந்த, நடுத்தர வீட்டு குழந்தைகளைப் போல் வளர்த்துள்ளது தான், "ஹை-லைட்'டான விஷயமே!
பாருங்கள்... சின்ன வயதிலேயே தன் மகனுக்கு மிடில் கிளாஸ் பெண்ணை தேர்ந்தெடுத்த அப்பா படுகெட்டி என்றால், அப்பாவின் பேச்சை தட்டாமல், "சுமார்' பெண்ணையும், மனமுவந்து ஏற்றுக் கொண்ட நம் ஹீரோ அஷ்வத், பயங்கரமான கெட்டிக்காரனாகத் தெரிகிறார் அல்லவா...
அதிலும், ஏணி வைத்தாலும் எட்ட முடியாத கோடீஸ்வர குடும்பத்தில் மருமகளாக நுழைந்து, கணவரின் சறுக்கல்களை கண்டும், காணாமலும், தன் பிள்ளைகளுக்காக தியாகம் செய்து, கணவரையும் தன் கைக்குள் போட்டுக் கொண்ட நம் ஹீரோயினுக்கு, "சாதனைப் பெண்மணி' பட்டம் கொடுக்கலாம் தானே!
புகுந்த வீட்டில் நுழைய இருக்கும் பட்டாம்பூச்சிகளே... நீங்களும், ஏன் இந்த வெற்றி பார்முலாவை கடைபிடிக்கக் கூடாது? 
— தொடரும்.

ஜெபராணி ஐசக் 
source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails