Tuesday, July 1, 2008

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் : பாகிஸ்தானில் 9 பேர் பலி

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் : பாகிஸ்தானில் 9 பேர் பலி

பெஷாவர் : பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பழங்குடியின மக்கள் பெருமளவில் வசித்துவருகின்றனர். இந்த இடத்தில் தாலிபான் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதால், அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று விமானி இல்லாத ரிமோட் மூலம் இயங்கக்கூடிய போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் பகுதியில் கைபர் கணவாய் அருகில் உள்ள ஹாஜி நம்தார் அமைப்பின் தலைமையிடம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் முற்றிலுமாக சேதமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது.
 
 

பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு : சென்னையில் பொதுமக்கள் அவதி

சென்னை : சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை அண்மையில் உயர்த்தப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் சாதாரண பெட்ரோலுக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்நிலையில் நேற்று பிரிமியம் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பும் குறைந்ததால், நகரின் பல்வேறு பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், காவல்துறையினர் விரைந்துவந்து போக்குவரத்தை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சென்னை துறைமுகத்திற்கு டீசல் ஏற்றிவரும் டேங்கர் கப்பலின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதே இந்தத் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்றும், இன்னும் ஓரிரு தினங்களில் இந்த சிக்கல் தீர்க்கப்பட்டுவிடும் என்றும் பெட்ரோல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் பெட்ரோல் பங்குகளில் இன்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு இன்றும் தொடர்கிறது.

 

 
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails