Sunday, February 12, 2012

சவூதி டிவிட்டர் பதிவாளர் மலேசியாவில் கைது

டிவிட்டரில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் கருத்துகளைப் பதிவிட்டதற்காக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அறைகூவல் எழுந்ததைத் தொடர்ந்து சவூதி அராபியாவிலிருந்து தப்பியோடிவந்த ஓர் இளம் செய்தியாளரைத் தடுத்து வைத்திருப்பதாக மலேசிய போலீசார் இன்று தெரிவித்தனர்.

ஹம்ஸா கஷ்கரி மலேசியா வந்திறங்கியதும் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் எனப் போலீஸ் பேச்சாளர் ரம்லி யூசுப் கூறினார்.

"சவூதி அதிகாரிகள் செய்த விண்ணப்பத்தின் அடிப்படையில் இண்டர்போல் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து கஷ்கரி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

கஷ்கரி "இஸ்லாத்தையும் முகம்மது நபி அவர்களையும் அவமதித்தற்காக" கைது செய்யப்பட்டார் என மலேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா தெரிவித்தது.

மலேசியாவுக்கும் சவூதி அராபியாக்குமிடையில் குற்றவாளிகளை ஒப்படைக்க வகை செய்யும் முறையான ஒப்பந்தம் எதுவும் கிடையாது.

ஆனாலும், இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தங்களின்கீழ் ஒன்று மற்றொன்றிடம் குற்றவாளிகளை ஒப்படைக்க முடியும் என்று மலேசிய உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார்.

நபிகள் நாயகத்தைப் பழித்துரைப்பது இஸ்லாத்தில் சமய நிந்தனையாகக் கருதப்படுகிறது. சவூதி அராபியாவில் அது மரண தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும்.

கஷ்கரி தம் கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டார். என்றாலும் அவரது தலை துண்டிக்கப்பட வேண்டும் என்ற அறைகூவல் ஓயவில்லை.

உயர் சமய அறிஞர்களைக் கொண்ட குழு, கஷ்கரி "சமய நம்பிக்கையற்றவர்" "சமய துரோகி" என்று வருணித்தது. அவரை இஸ்லாமிய நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் அது கோரிக்கை விடுத்துள்ளது.


source:semparuthi


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails