இணையத்தில் தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதில் உள்ள தகவல்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அல்லது யாருக்கு அனுப்ப வேண்டும் என்று திட்டமிடுகிறீர்கள். இப்படிப் பல குறிப்புகள் அது குறித்து அமைக்க எண்ணுகிறீர்கள். இவற்றைக் குறித்து வைக்க என்ன செய்யலாம்? மேஜை மீதுள்ள ஒரு தாளில், இணைய தள முகவரி மற்றும் தகவல்கள், அனுப்ப வேண்டிய நபர்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது பெயர் குறித்து வைக்கலாம். அல்லது இதற்கென டெக்ஸ்ட் எடிட்டரில் ஒரு பக்கம் திறந்து மேலே குறிப்பிட்டவற்றை தனியே அமைத்து வைக்கலாம். ஏன், இணையப் பக்கத்திலேயே, ஆங்காங்கே குறித்து வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பி.டி.எப். பைல்களில் பயன்படுத்தும் ""ஸ்டிக்கி நோட்ஸ்'' போல இணைய தளப் பக்கங்களிலும் குறித்து வைத்தால், நமக்கு வசதி தான். ஆனால் முடியவில்லையே என்று எண்ணுகிறீர்களா! கவலையை விடுங்கள். நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கு இந்த வசதியை "Note Anywhere" என்ற எக்ஸ்டன்ஷன் தொகுப்பு தருகிறது. இந்த தொகுப்பின் மூலம், குரோம் பிரவுசரில் ஒரு இணைய தளத்தினைக் காண்கையில், அதில் குறிப்புகளை எழுதி வைக்க எண்ணினால், உடனே அமைத்து வைக்கலாம். நீங்கள் மீண்டும் குரோம் பிரவுசர் மூலம், அந்த இணைய தளத்தினைப் பார்க்கையில், அந்த குறிப்புகளும் சேர்ந்து உங்களுக்குக் கிடைக்கும்.
இதனைப் பதிந்து கொள்ள, குரோம் பிரவுசரைத் திறந்து இயக்கவும். இதிலிருந்துhttps://chrome.google.com/extensions/detail/ bohahkiiknkelflnjjlipnaeapefmjbh என்ற முகவரி யில் உள்ள தளம் செல்லவும். அடுத்து கிடைக்கும் "Confirm Installation" என்ற டயலாக் பாக்ஸில் "Install" பட்டனில் கிளிக் செய்திடவும். இந்த எக்ஸ்டென்ஷன் பதிவு செய்யப்படும்.
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும், இணைய தளத்தில் குறிப்பினை அமைக்க, டூல்பாரில் கிடைக்கும் நோட் ஐகானில் கிளிக் செய்து நோட்ஸ் டைப் செய்திடவும். இப்போது அந்த ஐகான், நீங்கள் டைப் செய்திடும் நோட்ஸ்களின் எண்ணிக்கையைக் காட்டும். டைப் செய்த குறிப்பினை நீக்க வேண்டும் என்றால், அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று, கிடைக்கும் கட்டத்தில் உள்ள 'x' அடையாளம் மீது கிளிக் செய்திடவும்.
அமைத்த நோட்ஸ் ஒன்றை, வேறு ஒரு இடத்தில் அமைக்க, அதனை அப்படியே இழுத்துச் சென்று விட்டுவிடலாம். இந்த நோட் ஐகானில் ரைட் கிளிக் செய்தால், ஆப்ஷன்ஸ் மூலம் அமைக்கப்பட்ட நோட்ஸ் சுருக்கத் தினைப் பார்க்கலாம். மேலும், நோட்ஸ் அமைக்கப்பட வேண்டிய எழுத்துவகை, எழுத்தின் வண்ணம், பின்புற வண்ணம் ஆகிவற்றையும் செட் செய்திடலாம். இவ்வாறு செட் செய்தவற்றை செட்டிங்ஸ் பிரிவில் Save கிளிக் செய்து, விரும்பும் வரை நிரந்தரமாக அமைத்துக் கொள்ளலாம்.
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில், ஏதேனும் ஒரு, எடுத்துக்காட்டாக வேர்ட், எக்ஸெல், தொகுப்பினை இயக்கி அதில் புதியதாக ஒரு பைலை உருவாக்குகிறீர்கள். நம்மில் பலர், அந்த முழு பைலும் முடிந்த பின்னர்தான், அதற்குப் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவோம். முதலிலேயே சேவ் செய்து பெயர் கொடுத்தாலும், பின்னர் பைலின் பெரும்பகுதியினை முடித்து இறுதியில் தான் சேவ் செய்திடுவோம்,
ஒருவேளை, ஒருவேளை என்ன பல வேளைகளில், இதனை தொடக்கத்திலிருந்தே சேவ் செய்யாமல் மூடிவிடுவோம். அவசரமாகக் கம்ப்யூட்டரை மூடிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் பலர் என்ன ஆப்ஷன் கேட்கப்படுகிறது என்று அறியாமலேயே, படக் என பைலை சேவ் செய்யாமல் மூடிவிட ஆப்ஷன் கிளிக் செய்துவிடுவார்கள். அப்புறம் அடடா தவறு செய்துவிட்டோமே என்று பைலை எப்படிப் பெறுவது என்று விழிப்பார்கள். வழி இல்லை என்ற முடிவிற்கு வந்தால், மீண்டும் அந்த பைலை உருவாக்குவார்கள்.
இவர்களுக்காகவே, எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பில்AutoRecover என்ற ஒரு வசதி உள்ளது. இந்த வசதியை சேவ் செய்யப்படாத பைல்களையும் சேவ் செய்திடும் வகையில் செட் செய்திடலாம். அது இந்த வசதியில் ஒரு போனஸ் வசதியாகும். இந்த மந்திரத்தை அமைத்து செயல்படுத்திட, File டேப் கிளிக் செய்து, அதில் Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். ஆப்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன், இடது பக்கம் உள்ள Saveபிரிவைத் தேர்ந்தெடுக்கவும். வலது பக்கம், Save last auto saved version if I close without saving என்று இருப்பதனை செக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இனிமேல், நீங்கள் சேவ் செய்திடாத பைலையும், மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.
கொஞ்சம் பொறுங்கள், எப்படி சேவ் செய்யாத பைலை மீட்டுப் பெறுவது என்று சொல்லவில்லையே! File டேப் செல்லவும். இந்த டேப்பில் Recent என்பதைத் தேர்ந்தெடுக் கவும். இதனடியில் கிடைக்கும் தகவல்களில், கீழாக வலது மூலையில், Recover Unsaved Documents என்று ஒரு பட்டன் இருப் பதனைக் காணலாம். இந்த பட்டன், உங்களை புரோகிராம் தானாக, நீங்கள் சேவ் செய்யாத பைலை சேவ் செய்திட்ட இடத்திற்கு எடுத்துச் செல்லும். இங்கே இத்தகைய பைல்கள் அனைத்தும் இருக்கும். உங்களுக்கு, அப்போது எந்த பைல் வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து பின்னர் Open என்பதில் கிளிக் செய்திடவும். பைல் திறக்கப்படும். இப்போதாவது ஞாபகமாக சேவ் செய்திடவும்.