ஐதராபாத் : ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா எம்.பி.,யுமான ஜெகன் மோகன் ரெட்டி, கொஞ்சம் கொஞ்சமாக பா.ஜ., பக்கம் சாய்ந்து வருகிறார். சி.பி.ஐ., விசாரணைகளால் மனம் நொந்து போன அவர், ஆந்திராவில், காங்கிரசை வலுவிழக்கச் செய்யப் போவதாக சபதம் பூண்டு, இந்த முடிவுக்கு வந்ததாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர். அவர், முதல்வராகப் பதவியில் இருந்தபோதே, ஹெலிகாப்டர் விபத்தில், அகால மரணமடைந்ததை அடுத்து, முதல்வர் பதவி தனக்குக் கிடைக்கும் என, ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார், அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி. ஆனால், காங்., தலைமை, ரோசய்யாவை முதல்வராக நியமித்தது. கடுப்படைந்த ஜெகன், காங்., கட்சி, தன்னையும், தன் குடும்பத்தையும் ஓரம் கட்டுவதாகக் கருதி, எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டார்; போராட்டங்கள் நடத்தினார். இதையெல்லாம், எதிர்கொண்ட காங்., தலைமை, ஜெகனை முற்றிலும் ஒதுக்கத் துவங்கியது.
கோபமடைந்த ஜெகன், காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக் கட்சி துவக்கினார். தனக்கு ஆதரவாளர்கள் அதிகம் உள்ளதாகக் காட்ட, பல பாத யாத்திரைகள் நடத்தினார். இதையடுத்து, ஜெகனுக்கு எதிராக, காங்கிரசின் நெருக்கடி தீவிரமடைந்தது.
சி.பி.ஐ.,யை ஏவி, ஜெகனின் சொத்துக்களை சோதனையிட்டது, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இறந்து போன ராஜசேகர ரெட்டியை சேர்த்தது ஆகிய காங்கிரசின் நடவடிக்கைகள் தொடர்ந்தன.
இதை உணர்ந்த பா.ஜ., பார்லிமென்ட்டில் ஜெகனுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் துவங்கி உள்ளது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்,"சி.பி.ஐ., என்பது காங்கிரஸ் ஆதரவு புலனாய்வு நிறுவனமாக மாறிவிட்டது. ராஜசேகர ரெட்டி உயிருடன் இருந்த போது அவரைப் புகழ்ந்த காங்கிரஸ், இப்போது அவரைப் பலிகடாவாக ஆக்கி விட்டது' என்றார்.
ராஜ்யசபாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, "வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்.,) இறந்து போன ஒய்.எஸ்.ஆர்., பெயரை சி.பி.ஐ., சேர்த்துள்ளது ஏன்? அவர் உயிருடன் இருந்த போது அவரது ஆட்சியில் ஊழலைப் பற்றி ஒரு காங்கிரஸ் தலைவரும் வாய் திறக்கவில்லை. அவர் இறந்த உடன், அவரது மகனைக் குறிவைத்து அவரது புகழை காங்கிரஸ் குலைக்கிறது' என குற்றம்சாட்டினார்.
பா.ஜ.,வின் இந்த அதிரடி நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் ஜெகனுக்கு ஆதரவாகவே கருதப்படுகின்றன. ஆந்திராவில் தன் பலத்தை பா.ஜ., அதிகரிக்க வேண்டியுள்ளது. அதேபோல், சி.பி.ஐ., விசாரணையில் இருந்து வெளிவர, ஒரு தேசியக் கட்சியின் ஆதரவு ஜெகனுக்கு வேண்டியுள்ளது.
தற்போது கிருஷ்ணா மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், "என் தந்தை உயிருடன் இருந்த போது அவரைக் கடுமையாக விமர்சித்த பா.ஜ., தற்போது அவர் செய்துள்ள சேவைகளை பாராட்டுகிறது. ஆனால், என் தந்தையால் லாபம் அடைந்த காங்கிரசார், என் மீது புழுதி வாரித் தூற்றுகின்றனர். பா.ஜ.,வைப் பார்த்து காங்கிரஸ் வெட்கித் தலைகுனிய வேண்டும்' என, சாலையோரக் கூட்டங்களில் காட்டமாகக் கூறி வருகிறார்.
இதையடுத்து, பா.ஜ.,வில் ஜெகன் ஐக்கியமாவார், அல்லது, எதிர்வரும் தேர்தல்களில் பா.ஜ.,வுன் கூட்டணி வைத்து, ஆந்திராவில் காங்கிரசின் பலத்தைக் குறைப்பார் என, ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment