உலகநாடுகளிலுள்ள முஸ்லீம்களின் பிரச்சனைகளைப் பற்றி எல்லாம் நாம் அடிக்கடி முஸ்லீம் வலைப்பதிவாளர்களின் வலைப்பதிவுகளிலும் இணையத்தளங்களிலும் வாசிக்க முடிகிறது ஆனால் உள்ளூரில் அதுவும் தமிழ்நாட்டில் முஸ்லீம் பெண்கள் தமது உரிமைக்காகப் போராடியதை, துணிச்சல் மிக்கவொரு தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்ணின் தலைமையில் போராடினார்கள் என்பதையும் எந்த வலைப்பதிவிலும் காணவில்லை.. எத்தனை எதிர்ப்புக்களின் மத்தியில் தமிழ்நாட்டுப் பெண்களின், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்களின் அவலத்தை, ஆண்களின் கட்டுப்பாட்டிலுள்ள இஸ்லாமிய ஜாமாத்துக்களில் முஸ்லீம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துப் போராடியது மட்டுமல்ல தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்களுக்காக ஒரு ஜமாத்தையே தொடங்குமளவுக்கு ஒரு தமிழ் முஸ்லிம் பெண் துணிச்சலுடன் எதிர்த்துப் போராடியிருப்பது வியப்பை அளிக்கிறது. அந்தப் பெண் செல்வி. தாவுத் சரீபா கானம்,அவரைப்பற்றிக் எத்தனை பேருக்குத் தெரியுமோ எனக்குத் தெரியாது. இது வரை நான் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை. மேலைநாடுகளிலேயே பெண்களின் உரிமைகளுக்காக பாடுபடும் பெண்கள் எத்தனையோ எதிர்ப்புக்களைச் சம்பாதிக்கிறார்கள். அப்படியிருக்க தமிழ்நாட்டில் அதுவும் முஸ்லீம் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழ்நாட்டு முஸ்லீம் பெண் செல்வி. சரீபா தாவூத் கானம் அவர்களைப் பற்றியும், கீழேயுள்ள காணொளியையும் பார்த்த பின்பு, அவர் மீது மதிப்பு மேலும் அதிகரிக்கின்றது. பெண்களின் விடுதலையை, பெண்ணுரிமையை மதிக்கும் எவருக்குமே அப்படியான உணர்வு இந்தக் காணொளியைப் பார்த்ததும் நிச்சயமாக ஏற்படும். அதனால் அதனை இங்கு பதிவு செய்கிறேன்.
"அடிமைத்தளை முறித்திடவே புறப்படுங்கள் தோழி,
மதவெறியால் ஒடுக்கப்படும் பெண்ணினத்தைக் காப்போம்,
உடலால் மனதால் இழைக்கப்படும் வன்முறையை ஒழிப்போம்
உலகெங்கும் ஒன்றுபட்டு ஒற்றுமையை வளர்ப்போம்
ஒற்றுமையின் ஆற்றலினால் சமத்துவத்தைக் காண்போம்"
இந்தக் காணொளி தமிழ்நாட்டில் முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறது.
தமிழ்நாட்டுக் கிராமங்களிலிருந்து உருவாகிய தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு இயக்கத்தைப் பற்றியது இந்தக் காணொளி. பல தடைகளையும் தாண்டி பெண்களுக்கெதிரான வன்முறை, வறுமை, பெண்ணுரிமை போன்ற விடயங்கள் எவ்வாறு தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்களைப் பாதிக்கின்றன என்பதைக் காட்டுகின்றது. தமிழ்நாட்டு நகரங்களிலும் கிராமங்களிலும், தமிழ்நாட்டில் அரபு மயமாக்கல் அல்லது தமிழ்முஸ்லீம்களின் பாரம்பரிய இஸ்லாம் அரபுக்கலாச்சாரமயப்படுத்தப் படுவதானால், இன்று இஸ்லாமிய சமூகங்களில் கறுப்பு நிறப் பர்தாக்களின் பின்னால் ஒழிந்திருக்கும் அந்தப்பெண்களுக்கும் கவலைகள், உரிமை சம்பந்தமான போராட்டங்கள், ஆண்கள் தமக்கெதிராக இழைக்கும் அநியாயங்கள் எல்லாவற்றையும் பற்றி எல்லாம் பிரச்சனைகள் உண்டென்பதையெல்லாம் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனென்றால் இணையத்தளங்களிலுள்ள் முஸ்லீம் எழுத்தாளர்கள் அவற்றைப் பற்றி எல்லாம் மூச்சு விடுவதில்லை. ஆனால் இந்தக் காணொளியில் அவர்களின் அவலங்கள் ஒரளவாவது வெளிப்படுகிறது. அவர்கள் இன்று ஆண்கள் மட்டும் பங்குபற்றி பெண்களைப் பாதிக்கும் விடயங்களுக்கு, பெண்களின் வாக்குமூலத்தைக் கேட்காமலே தீர்ப்பளிக்கபடும் அநியாயத்தைத் தடுப்பதற்காக ஜமாத்துக்களின் பெண்களுக்கும் அங்கத்துவம் கேட்டு அதற்கு வாய்ப்பளிக்கப்படாமையாலும், முஸ்லீம் பெண்களுக்கு விவாகம், விவாகரத்து,சீதனம், சொத்துரிமை போன்ற விடயங்களில் இழைக்கப்படும் அநீதிகளைத் தடுக்கவும், தமக்கென பெண்கள் ஜமாத்தைத் தொடங்கியது மட்டுமல்ல, பள்ளிவாசல்களில் தொழுவதற்கு பெண்கள் அனுமதிக்கப்படாததால் பெண்களுக்காக ஒரு பள்ளிவாசலையும் கட்டியிருக்கிறார்கள்.
காணொளியின் சிலபகுதிகள்:
பெண்களின் உரிமைக்கும் மதத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? மதத்தின் பெயரால் ஏன் பெண்கள் இரக்கமின்றி அடக்கி, ஒடுக்கப்படுவது மட்டுமல்ல இழிவுபடுத்தவும் படுகிறார்கள். இதற்குகே காரணம் மதம் பெண்களைக் கீழ்மைப்படுத்துவதாலா? அல்லது சமூகம் ஆண்-பெண் சமவுரிமை என்ற விடயத்தில் நாட்டம் காட்டுவதில்லை என்பதாலா?
மெளலான ஆர்சாத் மதானி (Darul Uloom, Deoband U.P):
கடவுள் ஆண்களுக்கு சில திறன்களையும் பலத்தையும் கொடுத்திருக்கிறார், பெண்கள் தமது உடலமைப்பின் காரணமாக ஆணைப்போன்ற பலத்தையும், திறனையும் கொண்டிருப்பதில்லை அதனால் பெண் ஆணுக்குச் சமமாக இருக்க முடியாது.
Dr. அஸ்கர் அலி (பொறியியலாளர், இஸ்லாமிய அறிஞர்):
பாலின சமத்துவம் குரானிலும் உண்டு ஆனால் சமூகத்தில் பெண்கள் அந்த சமத்துவத்தை இழந்துவிட்டார்கள். அதனால் குரான் பெண்களுக்கெதிரானது என்று கருத்தல்ல ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தால் அதிலும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தால் குரானுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது தான் காரணமாகும்.
பேராசிரியர் நஸ்னீன் பர்க்கத் (மதுரை, தமிழ்நாடு)
நீ ஒரு பெண், பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். சொல்வதைக் கேட்டுக்கொண்டு அதன்படி நீ நடந்து கொள்ள வேண்டும்.
தமது விருப்பத்துக்கேற்ப குரானுக்கு அர்த்தம் கற்பித்துக் கொண்ட காரணத்தால், மதத்தால் ஒடுக்கப்பட்டு, அநீதிகள் இழைக்கப்பட்டதால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுடன் இந்த பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த முஸ்லீம் பெண்கள், செல்வி தாவூத் சரீபா கானம் அவர்களின் தலைமையில் தங்களின் நீண்ட கால மெளனத்தைக் குலைத்துக் கொண்டு தமது வீடுகளில் மறைந்திராமல் வெளியே வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்கள் தமது போராட்டத்தைத் தொடங்கியது மட்டுமல்ல, தமது போராட்டமும் சுயமரியாதை இயக்கம் போன்றதே என்கிறார்கள் அவர்கள். அவர்களின் கோரிக்கைகள் திடமானது,நேர்மையானதும், நியாயமானதுமாகும்.
மூன்று முறை தலாக் என்ற வார்த்தைகளைச் சொல்வதால் மட்டும் விவாகரத்து செய்யும் முறையை நிறுத்த வேண்டும்.
சீதனம் கொடுக்கும் வழக்கத்தை இல்லாமல் செய்ய வேண்டும்.
ஜமாத்துக்களில் பெண்களையும் பங்குபற்ற அனுமதிக்க வேண்டும்.
ஜமாத் என்பது முஸ்லீம் சமூகத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஆண்களை மட்டும் உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு. தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்கள் கேள்விகள் கேட்க மட்டுமல்ல தமது அடிப்படைமனித உரிமைகளை உறுதிப்படுத்த தொடங்கி விட்டனர்.
செல்வி. சரீபா கானம்:
ஜமாத்தில் ஆண்கள் பெண்கள் சம்பந்தமான விடயங்கள், பிரச்சனைகள் பற்றிப் பேசுவார்கள் ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைகளில் பெண்கள் பங்களிக்க அனுமதிக்க மாட்டார்கள்.எனது கணவன் என்னை விவாகரத்துச் செய்தால், என் கணவனை மட்டும் ஜமாத்துக்கு அழைப்பார்கள். பெண்களைப் பள்ளிவாசலுக்குள் அனுமதிக்க முடியாது என்கிறார்கள். என்னை (மனைவி) அழைப்பதற்குப் பதிலாக என்னுடைய தந்தையை அல்லது சகோதரனை அழைத்து என் சார்பில், என்னுடைய முறைப்பாடுகளைப் பேசச் சொல்வார்கள். ஆனால் அவர்களால் எப்படி எனது உள்ளக்கிடக்கைகளை,உணர்வுகளைப் பற்றிப் பேசமுடியும். அவர்களால் என்னுடைய உணவு, உடை சம்பந்தமாக வேண்டுமானால் பேசமுடியும். ஆனால் என்னுடைய வாக்குமூலம் இல்லாமலே, ஜமாத்தில் உள்ளவர்கள் என்னுடைய வாழ்க்கைப்பிரச்சனைக்குத் தீர்ப்புக் கூறுவார்கள்.
ஜமாத் என்பது பொதுவாக பள்ளிவாசலில் வணங்குபவர்களைக் கொண்ட ஒரு குழு. இது உண்மையில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அல்ல. ஆனால் தமிழ்நாட்டில் தனித்துவமான ஒரு வழக்கம் உண்டு. அங்கு சமூகத்தில் பெரியவர்களைக் கொண்ட ஜமாத் குழு அந்த சமூகத்தின் விவாகம், குடும்பம் சம்பந்தமான பிரச்சனைகள், விவாகரத்து, குழந்தைகளின் பாதுகாப்பு, காணி,நிலம் சம்பந்தமான பிணக்குகள் என்பவற்றை ஜமாத் விசாரித்து தீர்ப்பு சொல்கிறது. ஜமாத்தின் கட்டளைகளுக்கு மக்களிடம் மதிப்பும், பயமும் உண்டு. பெண்கள் ஜமாத்தில் பங்குபற்ற முடியாது அவர்களுக்கு ஜமாத்தில் அங்கத்தினாராகும் உரிமை இல்லை.
பேராசிரியர் நஸ்னீன் பர்க்கத் (மதுரை, தமிழ்நாடு):
ஜமாத்துக்கள் அனைத்திலும் பெண்களும் உறுப்பினராக வாய்ப்பளிக்க வேண்டும் ஏனென்றால் அது மட்டும் தான் இப்பொழுதுள்ள பிரச்சனைகளைத் தீர்க்கும். சினிமாவுக்குப் போனதற்காகக் கூட பெண்களை விவாகரத்து செய்த சம்பவங்களுமுண்டு. வெறும் நகைப்புக்கிடமான விடயங்களுக்குக் கூட தலாக் செய்த வழக்குகளுமுண்டு.
"சுயமரியாதையே பெண்விடுதலையின் முதல் படி
அல்லாவின் படைப்பில் ஆணும் பெண்ணும் சமமே
இஸ்லாம் என்ற பெயரைச் சொல்லி இருட்டறைக்குள் எங்களைப் பூட்டுவதேன் வெளிச்சத்தைத் தேடி வெளியே வந்தோம்
விடியல் காணும் வரை ஓயமாட்டோம்.." தற்போதைய ஜமாத் கமிட்டிகளில் எங்கள் வழக்குகளை நாங்கள் இன்றி விசாரிக்கின்றனர். எங்களைப் பற்றி நாங்கள் இன்றிப் பேசுகிறார்கள். நாங்கள் இல்லாமல் எங்களைப் பற்றிய நீதியை வழங்குகிறார்கள்.